ஏக்கருக்கு 3 லட்சம்.. பத்திரப்பதிவுக்கு 10 லட்சம்... ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் 70 லட்சத்தை அபேஸ் செய்த ஆசாமி!
நிலம் வாங்கித்தருவதாக கூறி ஓய்வுபெற்ற அரசு கல்லூரி பேராசிரியரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பெரியஅகரம் வாசுதேவன் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு திண்டிவனம் சாரம் கிராமத்தை சேர்ந்த பாலு என்பவர் அறிமுகமானார். அப்போது மோகன்தாசிடம், பாலு தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அவருக்கு நிலம் வாங்கித் தருவதாகவும் கூறினார். அதற்கு மோகன்தாஸ், தனக்கு நிலம் வாங்கித்தரும்படி பாலுவிடம் கேட்டுள்ளார்.
அதன்படி அச்சிறுப்பாக்கம் அருகே விளாங்காடு கிராமத்தில் 20 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், 1 ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும், பத்திரப்பதிவு ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.70 லட்சம் என்று பாலு கூறியுள்ளார். இதை நம்பிய மோகன்தாஸ், 7 தவணைகளாக ரூ.70 லட்சத்தை பாலுவிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பாலு, இது நாள் வரையிலும் மோகன்தாசுக்கு நிலம் வாங்கிக் கொடுக்காமல் அதற்கான ஏற்பாடு நடப்பதாக கூறி அவரிடம் போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றி வந்துள்ளார்.
பின்னர் மோகன்தாஸ், பாலுவிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததோடு பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மோகன்தாஸ் புகார் செய்தார். அதன்பேரில் பாலு மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரான துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன், இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் பாலுவை (56) மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்