ஆனந்தத் தாண்டவம் ஆடும் 800 ஆண்டு சோழர் கலை: விழுப்புரம் அருகே மிக அரிதான சிற்பம் கண்டெடுப்பு!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையம்பட்டு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர் சிற்பம்.

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சோழர் கால அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ளது வளையம்பட்டு கிராமம். இங்கு பழமைவாய்ந்த சிற்பம் காணப்படுவதாக இப்பகுதியைச் சேர்ந்த பா.சரத்குமார் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் மழையம்பட்டு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டார்.அப்போது 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய நடராஜர், நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன.
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
வளையம்பட்டு கிராமத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விளைநிலம் உள்ளது. இங்கிருக்கும் அரச மரத்தடியில் சுமார் 5 அடி உயரம் உள்ள பலகைக் கல்லில் நடராஜர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் இவர் காட்சி அளிக்கிறார். முன் வலது கரம் அபய முத்திரையிலும் இடது கரம் தூக்கிய கால் விரல்களைச் சுட்டிக்காட்டி கஜ ஹஸ்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளன.
பின் வலது கரம் உடுக்கையை ஏந்தியுள்ளது. இடது கரத்தில் இருப்பதை மரம் மறைத்திருப்பதால் தெளிவாகத் தெரியவில்லை. வலது கால் கீழே ஊன்றியிருக்க இடது காலைத் தூக்கி ஆனந்த நடனமாடுகிறார் சிவபெருமான்.
புன்னகை பூக்கும் அழகிய முகத்துடனும் அணிகலன்கள் அழகாகத் தெரியும்படி மிகுந்த நுட்பமும் கலைநயத்துடனும் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்புத் திருமேனிகளில் காணப்படும் திருவாசி எனும் அமைப்பு இந்த சிற்பத்திலும் காட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். இப்பகுதியில் இருந்த சிவாலயத்தில் இவர் மூலவராக வைத்து வணங்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக சிவபெருமான் நடனமாடும் திருக்கோலம் செப்புத் திருமேனிகளில்தான் கிடைத்துள்ளன. பலகைக் கல் சிற்பம் என்பது மிகவும் அரிதானதாகும். இதனால் மழையம்பட்டு நடராஜர் சிற்பம் அரிதானதாகக் கருதப்படுகிறது. இந்த சிற்பம் சோழர் காலத்தைச் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
நடராஜர் சிற்பத்துக்கு எதிரிலேயே சில அடி தூரத்தில் மிகப்பெரிய திமிலுடன் கூடிய நந்தி காணப்படுகிறது. கலைநயம் மிக்க மணிகள் இதன் கழுத்தை அலங்கரிக்கின்றன. சோழர் கால சிற்பக் கலைக்குச் சான்றாக நந்தி அமைந்துள்ளது. இதே பகுதியில் சப்தமாதர் குழுவைச் சேர்ந்த 4 சிற்பங்களும் காணப்படுகின்றன.
வளையம்பட்டு கிராமத்தில் செங்கல்லால் ஆன சிவாலயம் இருந்து காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். தற்போது அதன் ஓரிரு தடயங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் பழமைவாய்ந்த தடயங்கள் கிடைக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஏமப்பேரூர் பிரகதீஸ்வரன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





















