விழுப்புரத்தில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் விற்பனை - ஊழியர் தற்காலிக பணி நீக்கம்
முண்டியம்பாக்கத்தில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து விற்பனை செய்த ஊழியர் தற்காலிக பணி நீக்கம்.
விழுப்புரம்: முண்டியம்பாக்கதில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து விற்பனை செய்த ஊழியர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் சர்க்கரை ஆலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை விற்பனையாளர் வசூலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதை ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை எண் 11530-இல் பணிபுரியும் விற்பனையாளர் கணேஷ் என்பவர் அரசு நிர்ணயித்த விலையை விட (MRP) கூடுதலாக விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, உரிய விசாரணை செய்திட டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு ஆட்சியர் பழனி அறிவுறுத்தினார். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டாஸ்மாக் மோசடி நடவடிக்கை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதி 2014-ன்படி (Prevention and Detection of Fraudulent Acts in Tamil Nadu State Marketing Corportion 1.imited -2014) விற்பனையாளர் கணேஷ் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்