‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வருத்தம்’... அமைச்சர் சேகர் பாபு முன் அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி!
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, காலணிகளுடன் கோயிலுக்குள் நுழைந்த கட்சியினர் என குளறுபடிகள் தொடர்ந்தன
இந்துசமய அறநிலையத்துறை விழாவில் இஸ்லாமிய பெண் கலந்துகொண்டுள்ளாரே இதுவே திராவிட மாடல் என்றும், அடுத்த மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அரசு விழாவான இந்நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இறை வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “அறநிலையத்துறை அரசு நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும் அதை பற்றி கவலையில்லை. ஆனால், அறநிலைத்துறையும் அரசு துறைதான், அது சார்ந்த நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சிதான், இதனால்தான் இங்குள்ள விளம்பர பதாகையில் கோபுரத்துடன் கூடிய அரசு சின்னம் போடப்பட்டுள்ளது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும். இன்று அது பாடாதது வருத்தம். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். வரும் நாட்களில் கட்டாயம் இதை கடைபிடிக்க வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இங்கே பொறுப்பேற்றவர்கள் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது சரியான ஆட்களை நியமிக்க வேண்டும். குடிகாரன், கோயில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது அப்படி போட்டால் உங்களை பதவியில் இருந்து எடுத்துவிடுவோம்.
என் சாதிக்காரனை போடு, உன் சாதிக்காரனை போடு என இருந்தால் நாசமாக போய்விடும். இங்குள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சிறிய இடத்தை பேருந்து நிலையத்துக்கு கொடுத்தால் மேலும் பேருந்து நிலையம் நவீனமயமாக்க உதவும்” என்றார்.
முன்னதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “திமுக இந்துவிரோத கட்சி, எதிரிக்கட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் பங்கேற்றுள்ளாரே, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுவரை 3 மாவட்டத்துக்கு அறநிலைய துறை அறங்காவலர்களை நியமித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் 12 மாவட்டங்களுக்கு நியமித்துவிடுவோம். அடுத்த மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த வேலூர் அறங்காவலர் குழு தமிழகத்திலேயே சிறந்த அறநிலையத்துறை அறங்காவலர் குழு என்ற பெயர் எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சி செல்லியம்மன் கோயிலினுள் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த கட்சியினர் சிலர் காலணிகளை அணிந்தவாறு கோயிலுக்குள் வந்ததால் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் விழா தொடக்கத்தில் குத்து விளக்கு ஏற்றாதது, முறையாக திட்டமிடாதது, தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு போன்றவற்றால் சிறிது நேரம் அதிருப்தியுடன் சலசலப்பு நிலவியது.