திருடச்சென்ற இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் - வேலூரில் பரபரப்பு.. நடந்தது என்ன?
காவல்துறையிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் அவர் வீட்டிலேயே அங்கிருந்த புடவையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருடசென்ற இடத்தில் திருடனை பார்த்தவர்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சேண்பாக்கம் ஜீவாதெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் வேலூரில் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு காமேஸ்வரன் வயது (17), தியாகு வயது ( 15 ) 2 மகன்கள் உள்ளனர். இளைய மகனுக்கு (தியாகுக்கு) உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தியாகு அருகில் உள்ள நண்பர்களுடன் விளையாட சென்றதாக தெரிகிறது. பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மாயமாகி இருந்ததுள்ளது. மேலும் மற்றொரு கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து தியாகு வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் மர்மநபர் ஒருவர் இருந்துள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகு நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த மர்ம நபர் உனது உறவினர் என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த தியாகு வெளியே சென்று கதவை பூட்டியுள்ளார். மேலும் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூச்சலிட்டு கூப்பிடுள்ளார். பின்னர் தனது அம்மாவுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் யார் என்று தெரியாததாலும் இவர் வீட்டில் திருடத்தான் வந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக லட்சுமி இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பூட்டி வைக்கபட்டு இருந்த கதவை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த அந்த மர்ம நபர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். பின்னர் அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. காவல்துறையினரின் விசாரணையில், வீட்டுக்குள் தற்கொலை செய்த நபர் திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் பகுதியை சேர்ந்த பூபதி வயது (45) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட பூபதி மீது வேலூர் வடக்கு, உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லட்சுமி வீட்டுக்கு திருட சென்றபோது அங்கு மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் காவல்துறையிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் அவர் வீட்டிலேயே அங்கிருந்த புடவையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேல்விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)