Tiruvannamalai Girivalam: பேருந்து வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு.. கிரிவலம் வந்த பக்தர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தவர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படாததால் ஆன்மீக பக்தர்கள் அவதி.
நினைத்தாலே முக்தி தரும் என நம்பப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர். வெயிலின் கொடுமையை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் விடிய விடிய அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்து கொண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருவண்ணாமலை சுற்றிலும் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படுவது வழக்கம்.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக வரும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக பௌர்ணமிக்கு இயக்குவது போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததால் நேற்று காலை அவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லாததால் காலை 10 மணி முதல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை பேருந்துகளை இயக்கப்படாததால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, பாண்டிச்சேரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேருந்து இல்லாத நிலை இருந்தது
அப்போது சென்னை செல்லக்கூடிய ஒரு சிறப்பு பேருந்து மட்டும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்ததால் ஒரு பேருந்து மற்றும் வந்ததை தடுத்து நிறுத்தி கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் முன்பு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை சார்பாக ஏற்பாடு செய்யப்படும் விரைவில் பேருந்துகள் வரும் என கூறி சமாதானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல் செங்கம் சாலையில் உள்ள சந்தை மேடு தற்காலிக பேருந்து நிலையத்தில் பெங்களூருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.