Tiruvannamalai: மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள்; விரைவில் தீர்வு - சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர்
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் விசாரணை செய்து விரைவில் தீர்வு காணப்படும் சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் தகவல்...
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன் கிழமை காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைப்பெறும். அந்த வகையில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த குறைதீர்வு கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செய்யார், போளூர், வந்தவாசி, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் குறைகளை கூற வங்தனர். இதற்கு தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 39 சட்ட ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் 7 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் இன்று இந்த பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வருகை தந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் கோரிக்கை மனுக்களை காவல்துறை இயக்குனரிடம் அளித்தனர். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் நிலத்தகராறு, சொத்து தகராறு, கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை, அடிதடி தகராறு உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முகாமில் புதிதாக 450 பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.150 நபர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரில் திருப்தி அடையாமல் மீண்டும் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த முகாமில் பொதுமக்களிடம் மொத்தம் 600 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் பேசுகையில், காவல்துறையினரின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெறும், இதன் மூலம் மக்களின் பிரச்னைகளை எளிதில் முடிக்கப்படும் என்றும், அந்த வகையில் திருவண்ணாமலையில் நடைப்பெற்று வருகிறது, இதில் ஏராளமான பொதுமக்கள் அடிதடி , நில தகராறு போன்ற பிரச்னைகளை மனுக்களாக கொடுத்துள்ளனர். இதில் தீர்க்க முடியகூடிய பிரச்சினைகளை இங்கேயே பேசி சமரசம் செய்து விடுகிறோம், மேலும் பெறப்பட்ட இந்த மனுக்கள் அனைத்தும் காவல்துறை உயர் அதிகாரி முன்னிலையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.