Tiruvannamalai: ‘என்ன ஆட்சி நடக்கின்றது’ ... அரசு நிகழ்ச்சியில் ஆவேசத்தில் ஆவணத்தை வீசி எரிந்த திமுக நிர்வாகி - ஆரணியில் பரபரப்பு
திமுக ஆட்சியில் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறிய போது, திமுக மூத்த நிர்வாகி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஆவணத்தை வீசி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஜமாபந்தி நிறைவு விழா ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமசந்திரன், திமுக ஆரணி நகர சேர்மன் ஏ.சி.மணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அப்போது ஜமாபந்தி நிறைவு விழாவில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு வோளண்மை துறை சார்பாக விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமசந்திரனும் திமுக நகர சேர்மன் ஆகியோர் ஒன்றிணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இது குறித்து பேசிய ஆரணி நகர சேர்மன் ஏ.சி.மணி;
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களுக்கே அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த ஆட்சியில் கிடைக்கிறது என்றும், திமுக கட்சி அறிவித்த அனைத்து வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேடையின் அருகே ஆரணி நகர அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகி மோகன் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 75-நபர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா எவ்விதத்திலும் பயனளிக்கவில்லை. எதற்கு இந்த ஆட்சி என ஆவேசமாக பேசினார். இதனை கண்ட திமுக நகர சேர்மன் ஏ.சி.மணி தனது பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு அமர்ந்துவிட்டார்.
மேலும், திமுக மூத்த நிர்வாகி தொடர்ந்து ஆவேசமாக பேசி 2009-ம் ஆண்டு வழங்கபட்ட பட்டாவை இதுவரையில் இணையதளத்தில் இணைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ஆவேசமடைந்தார். அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் மோகனை சமரசம் செய்து இருக்கையில் அமர வைத்தனர். அரசு நிகழ்ச்சியில் திமுக சேர்மன் அரசு திட்டங்களை பேசும் போது திடீரென குறுக்கீட்டு என்ன ஆட்சி நடக்கின்றது என்று திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச பட்டா இணையதளத்தில் இதுவரையில் பதிவுசெய்யவில்லை என கூறிய திமுக நிர்வாகியால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்