Crime: தினமும் 10 லட்சம் வருமானம்.. செல்போனுக்கு வந்த லிங்க்.. வாலிபரிடம் ஆசைகாட்டி 18 லட்சம் மோசடி!
திருவண்ணாமலையில் செல்போன் செயலியின் லிங்க் மூலம் ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் உள்ள தேன் பழனி நகரை சேர்ந்தவர் குருராஜன் மகன் ஸ்ரீ வாசன் வயது (34), இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய செல்போன் வாட்சாப் எண்ணிற்கு கடந்த மாதம் 14-ஆம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தினமும் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடனும் வந்துள்ளது.
இதனால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவாசன் அதில் இடம் பெற்றிருந்த இணைப்பை தொடர்பு கொண்டு உள்ளார். அதில் ஆன்லைன் வணிகம் மூலம் குறிப்பிட்ட பொருளை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தினால் அதற்கு ஈடாக கூடுதல் தொகை தங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு படி நிலையாக முன்னேறிய ஸ்ரீவாசன் அதற்காக 10 லட்சம் வரை படிப்படியாக பணத்தை செலுத்தியுள்ளார். ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் அதைவிட கூடுதல் தொகை அவரது செல்போன் செயலீல் கணக்கில் இடம் பெறுவது போன்று குறுஞ்செய்தியும் வந்துள்ளது. எனவே அவரது நம்பிக்கையும் அதிகமானது.
அதனை தொடர்ந்து வங்கி சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டுமானால் அதற்கான வரி 4. 50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் நம்பிய அவர் ரூ. 4.50 லட்சத்தையும் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட படி பணம் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவே மீண்டும் அந்த செயலியில் முயற்சி செய்து உள்ளார். சேவை வரி சிக்கலால் தொகையை செலுத்த இயலாமல் கிடப்பில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அந்த செயலியின் மூலம் எனவே திரும்பப் பெரும் வகையிலான தொகையாக மேலும் 5 லட்சம் செலுத்த வேண்டும் என அந்த செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் தான் ஏமாறுகிறோம் என்ற சந்தேகம் ஸ்ரீ வாசனுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எப்படியாவது இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 5 லட்சத்தையும் கடந்த மாதம் 31ஆம் தேதி செலுத்தியுள்ளார்.
ஆனால் பணம் அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலி முழுமையாக செயலிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீ வாசன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலியில் முழுமையாக முயன்றுள்ளார். ஆனால் அதில் எவ்வித தகவல்களும் பரிமாற்றம் நடைபெறவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவாசன் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆய்வாளர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆன்லைன் நடைபெறும் பல்வேறு நூதன மோசடிகள் குறித்து தமிழக அரசு பலமுறை குறுஞ்செய்திகள் ஆகும் விழிப்புணர்வு வீடியோக்களும் அளித்துள்ளது ஆனாலும் எதையும் மீறி அவர் பணம் செலுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.