92 அடி உயரத்தை தொட்ட சாத்தனூர் அணை நீர்மட்டம் - வினாடிக்கு 1,319 கன அடி நீர் வருகை
’’சாத்தனுார் அணையில் வினாடிக்கு ஆயிரத்து 319 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 92.35 அடியை எட்டியுள்ளது’’
கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென் பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வழியாக கடலில் கலக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 119 அடி உயரத்தில் சாத்தனுார் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து அணையின்பாதுகாப்பு கருதி தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 319 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சாத்தனுார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக இருந்தது. மறுநாள் 82 அடியை எட்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் கடந்த மாதம் தொடக்கத்தில் அணை நீர்மட்டம் 83 அடியை தொட்டது. செப்டம்பர் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 84.4 அடியாக உயர்ந்தது. பின்னர் சில நாட்களாக தண்ணீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயரவில்லை. இப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 9 ஆம் தேதி 87.1 அடியாக இருந்தஅணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 12 ஆம் தேதி நிலவரப்படி அணைநீர்மட்டம் 90.45 அடி உயர்ந்தது. 13 ஆம் தேதி 91.40 அடியாகவும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.35 அடியாக உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணையில் சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் 20 மதகுகள் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே 99 முதல் 119 அடி வரை மொத்தம் 20 அடி உயரத்தில் மதகுகள் அமைவதால் சாத்தனூர் அணையில் தற்போது அதிகபட்சமாக 99 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். மேலும் வடகிழக்கு பருவ மழை இரண்டு மாதங்கள் தீவிரமடையும் அதோடு எதிர்பாராதவிதமாக அமையும் புயல் சீற்றங்களால் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளன. எனவே அணையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 95 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் 95 அடி எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும் அணையின் முழு கொள்ளளவான 119 அடி தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 95 அடி நிரம்பிய பிறகு அணைக்கு வரும் தண்ணீரை தென்பெண்ணை ஆற்றின் வழியாகவும். அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் வழியாகவும் தண்ணீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஓரிரு நாளில் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வருவாய்த்துறை மூலம் தாழ்வான பகுதிகளான திருவடத்தனூர், எடத்தனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், புத்தூர் செக்கடி, வாழவச்சனூர் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை அரசுப்பள்ளிகளில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கரையோரம் உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.