அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிக்கு வராத ஆசிரியர் பணிநீக்கம் - தி.மலை ஆட்சியர் அதிரடி
அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு 15 எண்ணிக்கையில் சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத் தங்களையும் அளித்தார்.
ஜவ்வாது மலை பள்ளியில் ஆய்வின் போது பள்ளிக்கு வருகை தராத ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், பள்ளி தொடர்பான ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆணையிட்டார். திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாதுமலை இயங்கி வரும் அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களின் கற்கும் திறனை குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தல் குறித்து கேள்விகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அனைத்து மாணவர்களிடம் அரசால் அளிக்கப்படும் பாடப்புத்தகங்கள், சீருடைகள், பைகள், காலணிகள் ஆகியவை அனைத்து மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதா என்பதை கேட்டு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உறுதி செய்தார். மேலும் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக சிறப்பு மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாணவர்களின் உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் வருங்காலங்களில் மழை நாட்கள்,குளிர் காலங்கள் வருவதால் மாணவர்களை அவ்வப்போது காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மருத்துவ துறைக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவினை மாவட்ட ஆட்சியர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் சமையல் செய்யும் இடத்திற்கு சென்று மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் இல்லையெண்றால் இதன் முலம் மாணவர்களுகளுக்கு நோய் தொற்ற அபாயம் உள்ளது. அதனால் சமையலறையை சுத்தமாக வைத்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகள் துவங்க பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தினார். பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் முறையாக கல்விகற்றுத் தருவதுடன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினையும் அவர்களுக்கு ஏற்படுத்தவும், பள்ளிவளாகம் முழுவதையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது தொடர்ந்து பள்ளிக்கு வருகை தராத ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், பள்ளி தொடர்பான ஆவணங்களை பராமரிக்காத தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரவும் ஆணையிட்டார். அரசவெளி உள்ளிட்ட 10 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு 15 எண்ணிக்கையில் சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத் தங்களையும் அளித்தார். இந்த ஆய்வின் போது, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் ம.தனலட்சமி. மாவட்ட பழங்குடியினர் நலதிட்டஅலுவலர் செந்தில் குமார் உடன் கலந்து கொண்டனர்.