கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகும் திருவண்ணாமலை - தேர்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்
’’கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை’’
நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 6ஆம் நாளன்று வெள்ளி தேரோட்டமும், 7ஆம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவுநாளில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்பட்டும். இந்த தீபத்திருவிழாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, சென்ற ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை இதனால் மகா தேரோட்டம் நடைபெறவில்லை
அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஆனால், பக்தர்களை கோவிலில் அனுமதிக்காமல் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி உற்சவம் நடைபெற்று முடிந்தது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பௌவுர்ணமி கிரிவலத்திற்கும் தடை தொடர்கிறது. அதனால், மீண்டும் இயல்பு நிலை திரும்பி கிரிவலம் மற்றும் தீபத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவில் வரும் 19 ஆம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும்.
ஆனால், இந்த ஆண்டும் தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா, தேரோட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே பக்தர்களிடம் பொதுமக்களிடமும் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வார இறுதிநாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் நேற்றையதினம் வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுதளங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்சரதங்களையும் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதையொட்டி, தேர் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த தகடுகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் மும்ரமாக ஈடுபட்டு வருவதால் இந்தாண்டு தேர் திருவிழாவிற்கான அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் பேசுகையில், தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தேர்களை ஆண்டுதோறும் சீரமைத்து பராமரித்தால்தான் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் நிலையில் இருக்கும். தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் மூடி வைத்திருந்தால், தேர் சக்கரங்கள், மரத் தூண்கள், அச்சு போன்றவை பாதிப்படையும். எனவே, தேர்களை வழக்கம் போல சீரமைக்கிறோம் எனவும் அரசு அனுமதித்தால், இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கும் கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது நாங்களும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.