உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்
வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கையுறை, முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 208 ஊராட்சி மன்ற தலைவர், 1,779 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 1,221 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோலவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 127 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 288 ஊராட்சி மன்ற தலைவர், 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா நோய்த் தொற்றின் இடையே நடத்தப்படும் தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கையுறை, முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.