திருவண்ணாமலை : விசாரணை காவலில் இருந்தவர் உயிரிழப்பு... ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்
இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் நேற்று முன்தினம் காலை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 4 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த மரணம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை மூடியதுடன் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்துறையினர் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் 2 நபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28 என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், காவல்துறையினர் விக்னேஷின் உடலை அவர்களே புதைக்க முயற்சிப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் திருவண்ணாமலையில் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்