Minister E. V. Velu: மருத்துவர்களுக்கு உதவிட செவிலியர்களை நியமனம் செய்தவரே கலைஞர்தான்... அமைச்சர் எ.வ.வேலு பேச்சு..!
திருவண்ணாமலை மருத்துவ முகாமில் மக்கள் நலமுடன் வாழ்ந்தால் தான் நாடு நலமுடன் இருக்கும் என்ற நோக்கில் தமிழக அரசு காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்; திமுக ஆட்சி கலைஞர் முதல்வராக இருந்த போது தான் நகர்புறங்களுக்கு இணையாக மருத்துவ வசதி கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கிராமப்புறங்களில் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிவையங்களும், துணை சுகாதார நிலையங்களும் திறக்கப்பட்டதாகவும், மாவட்டங்கள் தோறும் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அப்போது மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் போது அவர்களுக்கு உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு உதவிட செவிலியர்களை நியமனம் செய்தவரும் கலைஞர்தான்.
கலைஞர் காப்பீட்டு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் கொண்டுவரப்பட்டது, தொழுநோய் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டதால் இன்று தமிழகத்தில் தொழுநோய் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது ஆளும் தமிழக அரசு கலைஞர் வழியில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு முக்கியத்துவம் அளித்து AIIMS, JIPMER மருத்துவமனைகளுக்கு இணையாக சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவ மனையை திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மக்கள் நலமுடன் வாழ்ந்தால் தான் நாடு நலமுடன் இருக்கும் என்ற நோக்கில் தமிழக அரசு காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இம்முகாமில் பொது மருத்துவம் ,இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், சிறுநீரகம், மார்பகம் மற்றும் கருபப்பை வாய் புற்றுநோய், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மன நல மருத்துவம், நரம்பியல், இருதய மருத்துவம், மேலும் இம்முகாமில் ஸ்கேன், எக்ஸ்-ரே, எக்கோ, இசிஜி ஆகிய பரிசோதனைகளும் அனைத்து இரத்த பரிசோதனைகளும் மற்றும் சிறுநீரக பரிசோதனைகளும் நடைபெற்றதுஇந்த மருத்துவ முகாமில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன், செங்கம் மு.பெ.கிரி, வந்தவாசி அம்பேத்குமார்,செய்யார் ஜோதி , மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”