மேலும் அறிய
Advertisement
ஒகேனக்கல்லில் திடீர் தீ விபத்து - லைப் ஜாக்கெட், பரிசல்கள் எரிந்து நாசம்..!
மாவட்ட நிர்வாகத்தின் மீது உள்ள கோபத்தில் பரிசல் ஓட்டிகள் யாரேனும் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார்களா? அல்லது தானாகவே தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை.
ஒகேனக்கல் பரிசல் துறையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் பாதுகாப்பு உடைகள் (லைப் ஜாக்கெட்), பரிசல்கள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளிப்பது, அருவியின் அழகை பரிசலில் சென்று ரசித்து விட்டு செல்கின்றனர். பரிசலில் செல்பவர்களுக்கு பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அடிக்கடி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக சின்னாறு பரிசல் துறையில் பரிசல்களும், சுற்றுலாப் பயணிகள் அணியும் பாதுகாப்பு உடையும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு 8 மணியளவில் திடீரென பரிசல் துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல் பரிசல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுற்றுலா பயணிகள் அணிவதற்காக வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடைகள் (லைப் ஜாக்கெட்டுகள்) பாதுகாப்புடன் முழுவதுமாக எரிந்து சேதமானது. மேலும் 5 பரிசல்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பரிசல் ஓட்டிகள் நேற்று முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உடைகள் குறைவாக இருப்பதாகவும், பழுதாகி இருப்பதாகவும் பரிசல் ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தின் மீது உள்ள கோபத்தில் பரிசல் ஓட்டிகள் யாரேனும் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார்களா? அல்லது தானாகவே தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல் பரிசல் துறையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion