DGP felicitate: பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்: காவல்நிலையத்தில் பிரசவம் பார்த்த போலீசார் - டிஜிபி பாராட்டு
பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்
வேலூரில் பிரசவ வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிய காவல்துறையினரை நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.
பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற பெண்:
வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரே செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டு இருந்துள்ளார். அப்போது பணியில் இருந்த தலைமை காவலர் இளவரசி, பிரசவ வலியால் சிரமப்பட்டு கொண்டிருந்த பெண்ணை பார்த்தார். உடனே காவல் நிலையத்திற்குள் விரைந்த தலைமை காவலர், அங்கிருந்த உதவி ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்து வந்தார்.
பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்:
பிரசவ வலியால் மிகவும் சிரமப்படுவதை அறிந்து ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆனால் வலி அதிகமானதை தொடர்ந்து பெண் காவலர்களே பிரசவம் பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், பெண் குழந்தையும் ஆம்புலன்சு மூலம் வேலூர் பெண்ட்லாண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.
மேலும் ஆதரவற்ற பெண்மணிக்கும் குழந்தைக்கும் தேவையான உடைகளை காவல்துறையினர் வாங்கி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ வைத்தது.
பாராட்டிய டிஜிபி:
இச்சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, தலைமை காவலர் இளவரசி, உதவி ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் பெண் காவலர் சாந்தி ஆகியோரை நேரில் அழைத்து பணவெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
View this post on Instagram