வாணியம்பாடி : துப்பாக்கி.. கட்டப்பஞ்சாயத்து.. கஞ்சா.. பிரபல ரவுடி டீல் இம்தியாஸுக்கு வலை..!
இம்தியாஸ் , சமீபகாலமாக கைத்துப்பாக்கி , பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுத்தங்கள் கொண்டு கட்டபஞ்சயாத்து செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 பேரைக் கைது செய்து ரௌடியின் ஸ்க்ராப் குடோன் அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ் (வயது 47 ) . இவர் ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல் படும் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சியில் வாணியம்பாடி பகுதி இளைஞர் அணி தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் வாணியம்பாடி பகுதியில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றார் .
பெயரளவுக்கு சென்னையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள் (SCRAP) வாங்கி விற்பனை செய்யும் , ஸ்க்ராப் குடோன் நடத்துபவர் என்ற போர்வையில் வாணியம்பாடி பகுதியில் உலாவரும் டீல் இம்தியாஸ் மீது, வீடு புகுத்த பொருட்களை சூறையாடிய வழக்கு , வாணியம்பாடி டிஎஸ்பிக்கு மிரட்டல் கொடுத்த வழக்கு, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இம்தியாஸ் , சமீபகாலமாக கைத்துப்பாக்கி , பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் , இளைஞர்களைக் கொண்டு பெரிய அளவில் கஞ்சா வியபாரம் செய்து வருவதாகவும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சிபி சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நேற்று இரவு , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியிலுள்ள டீல் இம்தியாஸின் வீடு மற்றும் , ஸ்க்ராப் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் இம்தியாஸ் ஸ்க்ராப் குடோனில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாா, 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன்கள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் இருந்த ரஹீம், பசல், சலாவுதீன் மற்றும் கரன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த இம்தியாஸின் வீடு , ஸ்க்ராப் குடோன் மற்றும் அலுவலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சீல் வைக்கவேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவுக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின்பேரில் வருவாய்த்துறையின் இம்தியாஸின் ஸ்க்ராப் குடோன் அலுவலகத்திற்கு இரவோடு இரவாக சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டீல் இம்தியாசை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
காவலர்களுக்கு பாராட்டு :
தொடர்ந்து வாணியம்பாடியில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நிழல் உலக தாதா டீல் இம்தியாஸ் மற்றும் அவனது சட்டவிரோத செயல்கள் குறித்து, உரிய நேரத்தில் தகவல் கொடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்த மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
வாணியம்பாடியில் பிரபல ரவுடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.