Cyclone Mandous: திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் ருத்ர தாண்டவம் - விவசாயிகள் வேதனை
மாண்டஸ் புயலின் ருத்ரதாண்டவத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாழை மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கன மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழைமரம் சாய்ந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆரணியில் வாழை மரங்கள் சேதம்:
கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் அதிக அளவில் வாழை மரம் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர். வருடந்தோறும் வரக்கூடிய பருவநிலை மாற்றத்தினால் இப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் புயல் காற்றிலும், மழை நீரினாலும் சேதமாகி வருகிறது. இதுவரையில் சேதமாகிய பயிர்களுக்கு அரசு சரியான முறையில் நிவாரணம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் படவேடு பகுதியில் பயிரிடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இதனால் பயிரிடப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் சேதமான வாழைமரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசியில் வேரோடு மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்:
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால் வந்தவாசி பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் தற்போது மழை பெய்து வந்த நிலையில் வந்தவாசி ஆரணி சாலையில் 50 ஆண்டு காலம் மிகப்பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதில் அருகில் இருந்த மூன்று மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து கீழே விழுந்தது. பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இந்த இடத்தில் மரம் வேரோடு சாலையின் குறுக்கே சாயும் போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரம் வேரோடு சாய்ந்ததில் வந்தவாசி ஆரணி மற்றும் செய்யாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மின்சார துறை தீயணைப்புத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம் கம்பம் துண்டு துண்டாக உடைந்ததால் தற்போது வந்தவாசி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது .இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.