வேலூர்: ஒரே பதிவெண் கொண்ட வேனில் ஆவின் பால் திருட்டு: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
வேலூரில் தினந்தோறும் நூதன முறையில் வேன் மூலம் ஆவினில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு. ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்கம். பால் திருட்டு குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொண்டதில் அப்பலம்.
வேலுார் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால் பண்ணை, இந்த ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பசும்பால் பெறப்பட்டு அதனை பதப்படுத்தி, அதனை மீண்டும் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்படுகிறது. மேலும் இதில் சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் பாக்கெடுகள் அனுப்பப்பட்டுகிறது. முகவர்களுக்கு பால் பாக்கெட் சென்ற பிறகு அதனை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் பால் பண்ணையில் அடிக்கடி பால் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இதையடுத்து, உற்பத்திசெய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும், விற்பனைசெய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், 'தவறு எங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது?' எனக் கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 1 ம்தேதி முதல் பால் பாக்கெட்டுகளை ஆவின் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு வாகனம் மூலம் வினியோகம் செய்ய ஓப்பந்ததாரர் நியாமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கு வித்தியாசம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் பால் பாக்கெட்டுகள் ஏற்றி செல்ல பல பால் வேன்கள் பாலகத்தின் உள்ளே வந்தது.
இந்நிலையில் ஆவின் காவலாளி வாகன எண்களை சரி பார்த்த போது ஒரே வாகன எண்ணில் இரண்டு வண்டிகள் உள்ளே சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது TN23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இரண்டு லாரிகள் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நுாதன பால் திருட்டு சம்பவம் குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும் போது, ஒரே வாகன எண்ணில் பால் ஏற்றி செல்ல இருந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். இரண்டு லாரி உரிமையாளர்களிடமும் உள்ள வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வர சொல்லியுள்ளோம். விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் பால் திருட்டுக்காக நடந்தது அல்லது வேறு காரணமா என்ற முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் விக்கி என்ற நபர் போலியான வாகனத்தை எடுத்து சென்றதாக பணியில் இருந்த காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு பால் விநியோகிக்கும் வாகனங்களில் TN 23 AC 1352 என்ற ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரம் வேலூர் ஆவின் நிர்வாகம் சார்பில் சத்துவாச்சிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.