Vellore: காலை உணவு திட்ட சமையலர் பணிக்கு 'வசூல்' வேட்டை..! எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..! நடந்தது என்ன?
வேலூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்கு பணியாளர்களை தேர்வுசெய்வதில், வசூல் வேட்டை நடப்பதாக புகார்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
தமிழக அரசுப் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் சத்துணவு குறைப்பாட்டை போக்கவும், அவர்கள் காலை உணவை உட்கொள்ளும் வகையிலும் காலை சிற்றுண்டித் திட்டத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த காலை உணவு திட்டத்தை முதற்கட்டமாக, ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
வசூல் வேட்டையா?
அதனைத்தொடர்ந்து, நாளடைவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், சமையலர் பணிக்கு பணியாளர்களை தேர்வுசெய்வதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், என இவர்கள் அனைவரும் இடைத்தரகர்களாக பலரும் ‘வசூல்’ வேட்டையில் இறங்கியிருப்பதாக புகார் கிளம்பியிருக்கிறது
இந்தநிலையில், கல்லா கட்டும் கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி, வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய நான்கு வட்டாரங்களிலும், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், ஒடுகத்தூர் ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில், சமையலர் பணிக்குத் தற்காலிகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணி நிரந்தரம் கிடையாது.
இந்தத் திட்டத்தில் சமையலராக தேர்வு செய்யப்படும், சுய உதவிக்குழு மகளிரின் மகன் அல்லது மகள், சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் ஆரம்ப வகுப்பில் பயில வேண்டும். தொடக்கப்பள்ளியை விட்டு அவரின் மகன் அல்லது மகள் நீங்கிச்செல்லும்போது, அவருக்கு பதிலாக வேறொரு தகுதியுடைய சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர், சமையலராக தேர்வுசெய்யப்படுவார். சமையலர் பணிக்கு தேர்வுசெய்ய கையூட்டு, பணம் கேட்பதாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் எச்சரித்திருக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.. Karnataka: கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் இவரா ?.. இன்று கூடுகிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்..!