(Source: ECI/ABP News/ABP Majha)
200 ஆண்டு காலம் பழமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலை கொள்ளை
தானிப்பாடி பகுதியில் உள்ள குகை கோவில் இருந்த 200 ஆண்டு காலம் பழமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலை கொள்ளை இதுகுறித்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள மலமஞ்சனூர் புதூர் கிராமத்தின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலிருந்து மலையின் மீது 300 அடி உயரத்தில் பாறையின் இடுக்கில் குகையில் சித்தப்படையார் குகை கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் இருந்த 10 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனதாக காவல் தானிப்பாடி நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் கோவில் நிர்வாகிகள். இது குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம்; அப்போது மலமஞ்சனூர் புதூர் கிராமத்தின் மலையில் உள்ள குகை கோவிலின் குகை இடுக்கில் ஒரு நபர் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து வழிபட முடியும் அளவில் உள்ளது.
இந்த குகை கோவில் பலவருடங்கள் பழமையான கோவில், குகையின் உள்ளே 200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் ஈஸ்வரி இரண்டு சிலைகளும், ஈஸ்வரன் தனியாக ஒரு சிலையும், வீரபத்ர சுவாமி ஐந்து சிலையும், விநாயகர், முருகர் என ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் கொண்ட 10 ஐம்பொன் சிலைகள் பணியில் வைத்து இருப்போம் அதனை எடுத்து நாங்கள் வழிபாடு செய்துவருகிரோம். இந்த பழமையான இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று குகை கோவிலுக்கு சென்று மூன்று பானைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பஞ்சலோக சிலைகளை வெளியே எடுத்து வழிபாடுகள் செய்தும். மீண்டும் சிலைகளை அதே குகைக்குள் பானையில் வைத்து வைத்து விட்டு சென்று விடுவார்கள்.
மூன்றாண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில் சுற்று வட்டாரா பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல், பொங்கல் வைத்து வழிபாடு செய்தல் என பல்வேறு வழிபாடுகளை செய்வார்கள்.இந்த குகைக்குள் இருந்து எடுக்கப்பட்ட சிலைகளை நேரடியாக தென்பெண்ணை ஆற்றங்கரை கொண்டு சென்று அங்கு சிலைகளுக்கு அபிஷேகம் செய்து அதனை மீண்டும் ஊர்வலமாக மலமஞ்சனூர் புதூருக்கு கொண்டு வந்து புது பால் என்ற விழா கொண்டாடுவார்கள். மறுநாள் மீண்டும் புது பானையில் வைத்து மீண்டும் அதே குகைக்குள் வைத்து விடுவார்கள்.
இந்தக் குகைக்குள் சென்று சிலைகளை எடுக்கும் நபர் 9 நாட்கள் முதல் 15 நாட்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். கடைசியாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று பஞ்சலோக சிலைகளை எடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்து மீண்டும் அதே குகைக்குள் மூன்று பானைகளில் வைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் கார்த்திகை தீபத்தன்று கோவிலின் வெளியே தீபம் ஏற்றுவார்கள். அப்போது தீபம் ஏற்றும் போது பானைகள் உடைக்கப்படாமல் சாமி சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு பூஜை செய்வதற்காக கடந்த 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் கோவில் நிர்வாகி மற்றும் ஊர் பொதுமக்கள் குகை கோயிலுக்கு சென்று உள்ளனர்.அப்பொழுது குகை கோவில் உள்ளே செல்லும்போது சிலைகள் வைக்கப்பட்டிருந்த பானைகள் மட்டும் உடைந்து காணப்பட்டுள்ளது. பானைகளில் இருந்த 10 ஐம்பொன் சிலைகளும் காணாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகியான ஆலடியான் உடனடியாக தானிப்பாடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கோவிலின் நிர்வாகி வீரராகவனிடம் பேசுகையில்;
இந்த குகை கோவில் உள்ள சிலைகள் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் உள்ள சாமி சிலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, குகைகுள் சென்று சிலைகள் எடுப்பதற்கு நாங்கள் 9 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை விரதம் இருந்து செல்லுவோம், அப்போது சிலைகள் வைக்கப்பட்டுள்ள பாணைகள் மீது நாகங்கள் இருக்கும், விரதம் இருந்து செல்லக்கூடியவர்களை மட்டும் நாகங்கள் எதுவும் செய்வதில்லை, நாங்கள் சிலையை எடுத்து வழிபட்டு விட்டு மீண்டும் புது பாணையில் வைத்து விடுவோம், இதே போன்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 10 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருந்தது, ஆனால் எங்களுக்கு 15 நாட்களிலேயே மீண்டும் சிலைகளை கிடைத்து என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குகை கோவிலுக்கு வந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குகை கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சென்னையில் இருந்து சிலை திருடு போன குகை கோவில் மற்றும் மலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.