திருவண்ணாமலையில் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால நடுகல் கண்டுபிடிப்பு
Pallavar Middle Stone: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூலம் நல்லாபாளையம் கிராமத்தில் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால நடுகல்லும், புடைப்புச் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த திருவாமாத்தூர் சரவணகுமார் அளித்த தகவலின்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர்களால் கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தில் பல்லவர் கால நடுகல் கண்டறியபட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகனிடம் பேசுகையில், நல்லாபாளையம் கிராமத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள நிலத்தில் மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள நடுகல்லை ஆய்வு செய்ததில், நடுகல்லின் மேல்பகுதியில் 3 வரியில் கல்வெட்டும் கீழ்பகுதியில் வீரனின் உருவமும் காணப்படுகிறது. இதில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் ஏந்தியவாறு காணப்படுகிறார். இந்த வீரனின் வலதுபுற காலில் அருகே ஒரு பெண் உருவமும் காணப்படுகிறது. இந்நடுகல்லில் உள்ள 3 வரி கோவிசைய நரசிங்க பருமற்கு பத்தாவது கூறங்கிழாரு மக்கள் குமாரசத்தியாரு பட்ட கல் என்று வெட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு பல்லவர் மன்னன் நரசிங்க பல்லவனின் 10வது (பொ. ஆ.640) ஆட்சியாண்டில் கூறங்கிழாரு மக்கள் குமாரசத்தியாரு என்பவர் இறந்தன் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடந்த பூசலில் இறந்த வீரனின் நினைவாக இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. கண்டாச்சிபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான நடுகல் கல்வெட்டாக இது அமைந்துள்ளது.
புடைப்புச் சிற்பங்கள்
மேலும், இக்கல்வெட்டுக்கு வடக்குப் பகுதியில் உள்ள பாறையொன்றில் மேற்கு திசையை நோக்கி புடைப்புச் சிற்பங்களும் கல்வெட்டும் காணப்படுகிறது.இந்த சிற்பத்தில் மையப்பகுதியில் மலைக்குள் ஒரு அடியார் தியான நிலையில் அமர்ந்திருப்பது போன்றும் இரண்டு புறமும் சாமரமும் காட்டப்பட்டுள்ளது. அதற்கு மேலே வலப்புறம் விநாயகரும், இடது புறம் மயில் மீது அமர்ந்த முருகனும் புடைப்புச் சிற்பங்களாகவும் இரண்டும் புறமும் குத்துவிளக்கும் வலதுபுறம் பிறையும் காணப்படுகின்றன. இந்த சிற்பத்திற்கு அடியில் 2 வரியில் கல்வெட்டு உள்ளது. அதில் வடயோருடையான் கோவலராயன் பகவான் திருப்பணி என்று வெட்டப்பட்டுள்ளது. இதன்படி வடயோருடையா கோவலராயன் என்பவர் இந்த சிற்பத்தை வெட்டுவித்ததாக கருதலாம். இவை பாறை ஒன்றில் தனித்து காணப்படுகிறது. கோயிலோ அல்லது வழிபாட்டு இடமாக காணப்படவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் 16/17 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
இதுவரை கிடைத்த சிற்பத்தில் இது மிகவும் வேறுபட்டதாகவும் தனித்தன்மையுடன் காணப்படுகிறது. இதில் காணப்படும் மலை திருவண்ணாமலையைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். இது போன்று 60க்கும் மேற்பட்ட திருவண்ணாமலை குறியீடு கொண்ட கல்வெட்டுகள் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதன் உள்பகுதியில் உள்ள அடியார் யார் என்பது தெளிவாகவில்லை. சாமரத்துடன் தியான நிலையில் தீர்த்தங்கரர் சிற்பம் போன்றே அமைந்துள்ளது. இதை சமண சிற்பம் என்று ஐயுறவும் வாய்ப்புள்ளது. எனினும் கண்டாச்சிபுரம் பகுதியில் கிடைத்த இந்த இரண்டு சிற்பங்களும் அதன் கல்வெட்டுகளும் தமிழக வரலாற்றில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தமிழ்நாடு அரசு இந்த கல்வெட்டுகளை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் கோருகின்றனர்.