திருவண்ணாமலை : மீண்டும் திறந்த பள்ளிகள்.. கும்ப மரியாதை அளித்து மாணவர்களை வாழ்த்திய ஆசிரியர்கள்
நடுநிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கநிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2545 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதில் நகராட்சி டவுன்ஹால் நடுநிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களை வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து முதலாம் வகுப்பிற்கு வருகை புரிந்த முதலாம் வகுப்பிற்கு சென்று மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்களையும் வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவர்களிடையே ஆட்சியர் முருகேஷ் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கவேண்டும் அப்போது தான் நீங்கள் அரசு அதிகாரிகள் மற்றும் நீங்கள் விருப்படும் வேலைக்கு செல்லமுடியும் என்று தெரிவித்தார். மேலும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கும்பமரியாதை அளித்து வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாட வேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் (Academic Calendar) உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி திறக்கும்/முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திறக்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து, மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் கல்வி இணை செயல்பாடுகளில் (extra curricular activities) கூடுதல் கவனம் செலுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இலக்கிய போட்டி, சிறார் திரைப்படங்கள், வெளிநாட்டு கல்வி சுற்றுலா போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாட புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.