கிரிவலப் பாதையில் தண்ணீரைத் தேடி வந்த 2 மான்கள் நாய்கள் கடித்து சாவு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தண்ணீரைத் தேடி வந்த 2 மான்கள் நாய்கள் கடித்து உயிரிழப்பு மான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தரும் தீபமலை மற்றும் கிரிவலப் பாதையை சுற்றிலும் உள்ள காப்பு காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மயில், முயல் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், தண்ணீர் தேடி வனவிலங்குகள் நகர் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் மான்கள் கிரிவலப் பாதையில் உள்ள நாய்களிடம் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கிரிவலப் பாதையில் காஞ்சி சாலை கூட்ரோடு அருகில் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்துள்ளது நாயிடமிருந்து மான் தன்னை காப்பாற்றிக் கொள்ள சாலையில் இருந்த உணவகத்திற்குள் நுழைந்தது.
இதுகுறித்து உணவக உரிமையாளர் ரோந்து காவலர் ரகோத்தமனுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரகோத்தமன் மான் பயப்படாமல் இருக்க மானின் கண்களை கட்டியதுடன் மானுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தார். அதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து புள்ளி மானை வனத்துறையினரிடம் ஓப்படைத்தார். அதன் பிறகு வனத்துறையினர் புள்ளிமானை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். ஆனால் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோன்று திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள புனல் காட்டு பகுதியில் இருந்து தண்ணீருக்கா வெளியே வந்த புள்ளி மானை அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்து குதறியது. இதனால் புள்ளிமான் உயிரிழந்தது. 2, மான்களின் உடல்களையும் வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக வருவதால் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் மான் முயல் மயில் காட்டுப்பன்றி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் பாதுகாக்க வனத்துறை மூலம் கம்பி வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலமுறை மாவட்ட வனத்துறைக்கு கோரிக்கை வைத்தும், இதுவரையில் வேலி அமைக்காமல் வனவிலங்குகளை பாதுகாக்காமல் வனத்துறை அதிகாரிகள் செயல்படுவதால் அவ்வப்போது மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் போது நாய்கள் கடித்து கொன்று விடுவது தொடர்கதையாகி வருகிறது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.