’உதயநிதி ஆதரவாளர் ஜோயலை ஓரங்கட்டும் கீதா ஜீவன்’ தூத்துக்குடியில் தகிக்கும் உள்ளாட்சி தேர்தல் உஷ்ணம்..!
உதயநிதியின் ஆசியோடு தூத்துக்குடி மாநகராட்சியில் களமிறங்கி மேயர் பதவியை பிடிக்க ஜோயல் திட்டமிட்ட நிலையில், அவருக்கு முட்டுக்கட்டை போட்டு தனது தம்பி ஜெகனை மேயராக்க முயற்சித்து வருகிறார் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. முதல் முதலாக அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் ஆதரவோடு நகராட்சி தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் நியமன மேயராக தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட்ட சசிகலா புஷ்பாவும் அதனை தொடர்ந்து அதிமுகவின் அந்தோணி கிரேசியும் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்து இதோ வருது அதோ வருதுன்னு போக்கு காட்டிய உள்ளாட்சி தேர்தல் இப்போ வந்திருக்கு.தூத்துக்குடி மாநகராட்சி தொகுதி 51 வார்டாக துவங்கப்பட்டு தற்போது 60 வார்டாக உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 1,57,763 ஆண்கள், 1,64,570 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,22,388 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளரான பாலகுருசாமிக்கு மேயர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் அமைச்சரின் சகோதரர் ஜெகன் தனது ஆதரவாளரான பிரதீப் என்பவருக்கு மேயர் சீட்டை கேட்க தலைவலி போய் திருகு வலியானது. என்னடா இது வம்பா போச்சின்னு இதனை பொது தொகுதியாகப் மாற்ற பல்வேறு கட்ட முயற்சிகள் நடைபெற்ற நிலையில் பொதுவா தனியா என்ற நீண்ட குழப்பத்திற்கு பின்னர் தற்போது பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள் வருவதால் கடந்த மழை காலத்தில் தண்ணீர் வெளியேற்றுவதில் பாரப்பட்சம் காட்டுவதாக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரே தேங்கிய மழை நீரை அகற்றும் பணி சூடுப்பிடித்தது.
திமுக இளைஞரணியின் துணை செயலாளரும் வழக்கறிஞருமான தூத்துக்குடி ஜோயல் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார், அது கிடைக்காமல் போனாலும் உதயநிதியின் குட்புக்கில் இருக்கிறார். இப்போது தூத்துக்குடி மேயர் தேர்தலில் அவர் குதிக்க, தூத்துக்குடியே அதகளமாகி உள்ளது. உதயநிதியின் பரிபூரண ஆசியோடு ஜோயல் களம் இறங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஜோயல் போட்டியிட மில்லர்புரம் பகுதிக்கு உட்பட்ட 34 வது வார்டில் விருப்ப மனு அளித்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி மீது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் கீதா ஜீவன் புகார் அளித்ததாகவும் இதுகுறித்த பிரச்சனை ஆழ்வார்பேட்டை வரை சென்றதாகவும் கடந்த வாரத்தில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்பொழுது அமைச்சர் கீதா ஜீவன் தனது தம்பி ஜெகனை மாநகராட்சி மேயர் ஆக்க முயற்சித்து வருகிறார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரும் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான தூத்துக்குடி ஜோயலை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இளைஞரணி தலைமை பச்சைக்கொடி காட்டிய நிலையில் அவர் சார்பாக விருப்ப மனு கேட்ட நிலையில், ஜோயல் போட்டியிட்டால் தனது தம்பி ஜெகன் மாநகராட்சி மேயர் ஆவதில் சிக்கல் ஆகிவிடுமோ என்று எண்ணி, 34வது வார்டை அவசரம் அவசரமாக கீதா ஜீவன் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு நிலைமை தற்போது சீரான நிலையில் தற்போது இளைஞரணியையும் எதிர்க்கத் துணிந்து விட்டாரோ? என தூத்துக்குடி மாவட்ட திமுகவில் அரசல் புரசலாக பேச்சு அடிபடுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள நல்லமலையில் உள்ள ஜோயலின் வீட்டிற்கு வந்த உள்ளூர் திமுகவினர் ஜோயல் தான் மாநகராட்சி மேயர் என சொல்லி அவருக்கு வாழ்த்து முழக்கங்களை அள்ளி வீசிச் சென்ற நிலையில், கீதா ஜீவன் அவரை ஓரங்கட்ட முயற்சித்து வருகிறார்.
மாவட்ட செயலாளர், அமைச்சர் என்ற அதிகாரத்தில் இருக்கும் ஜீதா ஜீவன், உதயநிதியின் ஆதரவாளரான ஜோயலை ஓரங்கட்ட முயற்சிப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. இறுதியில் இந்த போட்டியில் வெற்ற பெறப்போவது உதயநிதி ஆதரவாளர் ஜோயலா அல்லது கலைஞரின் முரட்டு பக்தரின் மகளான கீதா ஜீவனின் தம்பியா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்