ஏப்.22ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்
தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வருகிற 22ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை வெள்ளி கிழமைகளில் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுபோக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதன் பின்னர் கொரோனா நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து முழு ஊரடங்கு உத்தரவு அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து பொது போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. அந்தவகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வித பயணிகள் ரயில் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கோடை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கோடைகால 2 வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரெயில்வேயில் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் எண் 06005 தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வருகிற 22ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை வெள்ளி கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 12.25 மணிக்கு வரும். பின்னர் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் ரெயில் எண்.06006 நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 24-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.20 மணிக்கு வந்து 11.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. பின்னர் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இதேபோல் தென்காசி வழியாக நெல்லையில் இருந்து தாம்பரம் வரை வாராந்திர சிறப்பு ரயில் எண். 06004 வருகிற 17-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து 3.50 மணிக்குபுறப்பட்டு செல்கிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக ரயில் எண். 06003 தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 18-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.05க்கு வந்து 3.10-க்கு புறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர் சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது.