பெரம்பலூருக்கு தனி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் கே.என்.நேரு
பெரம்பலூர் நகராட்சி முதல் நிலை தேர்வு நகராட்சியாக மாற்றப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சி செய்து வருகிறோம் - அமைச்சர் நேரு பேட்டி
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரம்பலூரில் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்த போது, கூறுகையில், “பெரம்பலூர் நகராட்சிக்கு ஆணையர் நியமிக்கப்படுவார். நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு புதிய வாகனங்கள் வாங்கி கொடுக்கப்படும். நகராட்சி காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும். பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா நகரில் பாலம் கட்ட அனுமதி வாங்கி தரப்படும். குடிநீரை பொறுத்தவரை காவிரியிலும், கொள்ளிடத்திலும் 248 இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 78 இடங்களில் வெள்ளத்தினால் குழாய்கள் உடைந்து சேதமாகிவிட்டது. பெரம்பலூருக்கு வரவேண்டிய குழாயும் அதில் ஒன்று. தற்போது ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டு வருகிறோம். பெரம்பலூர் நகராட்சி முதல் நிலை தேர்வு நகராட்சியாக மாற்றப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சி செய்து வருகிறோம். ஒரு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றார். மேலும் பல திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “அனைத்து இடங்களிலும் தண்ணீர் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அங்கு எல்லாம் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முதலமைச்சரின் அனுமதியை பெற்று தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். அப்போது பெரம்பலூரில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் வருவதுபோன்று செய்து விடுவோம். பெரம்பலூர் நகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதியாக செய்து கொடுப்போம்” என்றார். இந்த நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
இதுக்குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் இவற்றை கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதால் மக்கள் அவதிபடுகின்றனர். ஊராட்சி, நகராட்சி தலைவர்களிடம் பல புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்திலும் புகார்கள் கொடுத்துள்ளோம். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை என்றனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இனி வரும் காலகங்களில் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவேண்டும். ஆகையால் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்