மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த 'வானவில் மன்றம்' - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 'வானவில் மன்றம்' என்பது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி ஆகும். இதற்காக ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவார்கள். தேவையான கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள். இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளைச் செய்து காட்டி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவார்கள் என்பதாகும்.
குறிப்பாக 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல், கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருள்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல் கட்டமாக ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாரந்தோறும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ற பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும். பின்னர் மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். 'ஸ்டெம்' (அறிவியல்), தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் குறித்து கருத்தாளர்கள் பள்ளிக்கு வரும்போது ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளைச் செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். வானவில் மன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்பு பிற்பகல் 2 மணிக்கு 13 ஆயிரத்து 210 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்படுகிறது. மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் முன்னிலையில் கலெக்டர், மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துக்காக 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் க. நந்த குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதனால் திருச்சி மாவட்டத்தில் பலத்த பாதுக்காப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டனர்.