அழிந்து வரும் உய்யக்கொண்டான் கால்வாய் - பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
வரலாற்று சிறப்புமிக்க உய்யக்கொண்டான் கால்வாயை சீரமைத்து, பாதுக்காக வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மாமன்னன் இராசராசனின் மகத்தான சாதனைகளில் ஒன்று காவிரியின் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே உள்ள மாயனூர் என்னும் இடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி அதன் மூலம் திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென்கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்த கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து அங்கு திகழ்ந்த பெரிய ஏரிகளுக்கு இணைப்பு தந்து அந்த ஏரிகளுக்கு பாசன வசதி செய்துள்ளார். மாமன்னர் இராசராசன் வெட்டிய கால்வாய்க்கு அவரது பட்டப் பெயரான உய்யக்கொண்டான் என்ற பெயரையே சூட்டினார். இன்றளவும் அந்த பெயர் நிலைக்கப் பெற்றுள்ளது. உய்யக்கொண்டான் கால்வாயை வெட்டியதுடன் இல்லாமல், அதன் வழி வரும் நீரைத் திறம்பட நிர்வாகம் செய்த மாமன்னனின் செயல்பாடு, தொழில்நுட்பத்தால் வெண்டையம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் சென்றது. இந்த ஏரி 360 ஏக்கர் பரப்பளவுடன் விளங்குகிறது.
காவிரி நீர் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியே வந்து இராயமுண்டான்பட்டி ஏரியை முதலில் நிரப்புகிறது. அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்து வெண்டையம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் செல்கிறது. இந்த ஏரி வெண்டையம்பட்டியில் கழனி முழுவதற்கும் பாசனவசதி தருகிறது. உய்யக்கொண்டான் என்ற தன் பட்டப் பெயரில் ஒரு கால்வாயை வெட்டி, அக்கால்வாய் வரும் வழியில் உள்ள பல ஊர்களிலும் பெரிய ஏரிகளை வெட்டி, அதன் மூலம் அந்தந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தைக் காத்து, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறவும், கால்நடை வளம் பெருகவும் வழிகை செய்த மாமன்னன் இராசராச சோழனை எவ்வளவு போற்றினாலும் தகும்.
மேலும் விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த உய்யக்கொண்டான் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மேலும் பேட்டைவாய்த்தலையிலிருந்து பிரிந்து திருச்சி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் இக்கால்வாய் முடிவடைகிறது. சுமார் 79 கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றது. உழவுக்கு உயிராய் ஓடிக்கொண்டிருந்த உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் கலப்பதால் உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரின் தன்மை முற்றிலுமாக மாறி கழிவு நீர் வாய்க்காலாகவே மாறிப்போனது.
குறிப்பாக மாநகரப் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வீடுகள், மருத்துவமனைகள், உணவகங்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக இந்த வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் வாய்க்கால் முற்றிலுமாக மாசுபட்டுள்ளது. அதிலும் திருச்சி மாநகருக்கு உள்பட்ட ராஜா காலனி, அண்ணா நகர், பாலக்கரை, ஆழ்வார்தோப்பு மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் 18 இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் உய்யகொண்டான் கால்வாய் மிகவும் மாசடைந்து வருகிறது. ஆகையால் உடனடியாக இந்த வரலாற்று சிறப்புமிக்க கால்வாயை சீரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.