என்கவுண்டரில் உயிரிழந்த திருச்சி ரவுடி துரைசாமி கொலை மிரட்டல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப் பகுதியில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை கடந்த 11 ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்...
திருச்சி மாநகர் புத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி வயது (42), இவர் பிரபல ரவுடி ஆவார். கடந்த 2022-ல் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார்.
மேலும், திருச்சியை சேர்ந்த இளவரசன் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் துரைசாமி மீது உள்ளது.
இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த துரைசாமியை போலீஸார் தேடிவந்தனர்.
அப்போது புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீஸார் கடந்த 11 ஆம் தேதி மாலை அங்கு சென்றனர். பின்பு வனபகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்துக்கும், தனியார் வேளாண் கல்லூரிக்கும் இடையிலான பகுதியில், சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் யூக்கலிப்டஸ் காட்டில் துரைசாமி பதுங்கி இருந்தது தெரியவந்தது.
சில மணி நேரங்களுக்கு பிறகு ரவுடி துரைசாமியை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
பின்பு போலீசாரை பார்த்துடன் தப்பிக்க முயற்சி செய்தாக கூறபடுகிறது. மேலும் போலீசாரை பார்த்ததும் துரைசாமி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார். மேலும், உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கி உள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் காவல் ஆய்வாளர் முத்தையன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்பு ரவுடி துரைசாமி போலீஸாரைத் தாக்க முயன்றுள்ளார். ஆகையால் போலீசார் ரவுடி துரைசாமியை நோக்கி ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவுடி துரைசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் நீதிபதி விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி துரைசாமியின் புகைப்படத்துடன் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது கொலை மிரட்டல் விடும் பாணியில் அமைந்திருக்கிறது.
அந்த வீடியோ பதிவில் திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும் என குறிப்பிட்டு அதில் ரவுடி துரையின் புகைப்படம் மற்றும் இறுதி சடங்கின் போது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் வைத்து, வலியில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் வலியில் நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம் எனும் பாடலுடன் வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.