அரிசி வாங்க சென்றபோது விபரீதம்... லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி
மண்ணச்சநல்லூருக்கு அழுந்தலைப்பூரை சேர்ந்த 20 பெண்கள் வந்தனர். பின்னர் இரவு வழக்கம்போல் அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி வீட்டிற்குத் திரும்பி சென்றனர்.

திருச்சி அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டு உபயோகத்திற்காக ஆண்டுதோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு ஊருக்கு செல்வர். இது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான விஷயம். தனித்தனியாக போய் வாங்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து வாங்குவார்கள். இந்த மூட்டைகளை டிராக்டரில் வைத்து ஊருக்கு எடுத்து வருவார்கள்.
அதேபோல் நேற்று மாலை மண்ணச்சநல்லூருக்கு அழுந்தலைப்பூரை சேர்ந்த 20 பெண்கள் வந்தனர். பின்னர் இரவு வழக்கம்போல் அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி வீட்டிற்குத் திரும்பி சென்றனர். அப்போது, திருச்சி - சிதம்பரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் இருதயபுரம் அருகே சென்றபோது டிராக்டர் மீது வேகமாக வந்த டாரஸ் லாரி மோதியது.
இந்த விபத்தில் அரிசி மூட்டையின் மேற்பகுதியில் அமர்ந்து வந்த சாந்தி, செல்வநாயகி, ராசாம்பாள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையிலும் விபத்து
இதேபோல் தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி நீலாவதி ( 53). நேற்று நீலாவதி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மாலை வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக டிராக்டர் டிரெய்லரில் நீலாவதி உள்பட ஆறு பெண்கள் அமர்ந்து வந்தனர். டிராக்டர் புதுஆற்றங்கரை பாலம் அருகே வந்த போது நீலாவதி மற்றும் இரு பெண்கள் டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நீலாவதி இறந்தார். மேலும் இரு பெண்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















