திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 21,863 நபர்களுக்கு வங்கி பற்று அட்டைகள்
திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 21,863 நபர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு "மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் மேல்முறையீடு செய்து ஆய்வின் பேரில் தேர்வு செய்யப்பட்டு. அப்பயனாளிகளுக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமை பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 21,863 நபர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். மேலும் திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன். பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சா.சரண்யா, மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.