திருச்சியில் புனித ஆறு, கூவமாக மாறிய அவலம், கண்டுகொள்ளாத மாநகராட்சி - மக்கள் குற்றச்சாட்டு
பல நூறு ஆண்டுகளாக ஓடிய ஆறு இன்று கூவமாக மாறி துர்நாற்றம் வீசுவது வேதனையளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர் , உறையூர் பகுதியில் உள்ள காசிவிளங்கி ஆற்றை பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வாங்க பார்ப்போம்... திருச்சி குழுமணி செல்லும் சாலையில் உள்ள காசி விளங்கி புண்ணியநதி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஆறு. இது குழுமணி கரை உய்யகொண்டான் ஆற்றில் இருந்து புறப்பட்டு குடமுருட்டி வழியாக காவிரியில் கலக்கின்றது. குறிப்பாக காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ளதால் இந்த ஆற்றிற்கு காசி விளங்கி புண்ணியநதி என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர். இந்த ஆற்றை கடந்த பல வருடங்களுக்கு முன்பு மக்கள் தினமும் , குளிப்பது, வீட்டிற்கு தேவையான தண்ணீர் எடுப்பது, கால் நடைகள் நீர் அறுந்துவது, குறிப்பாக அருகில் உள்ள கோவிலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இந்த ஆற்றில் புனித நீர் எடுத்தல் என பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் இந்த ஆற்றில் 4 படித்துறைகள் இருந்ததாகவும் உறையூர் பகுதி மக்கள் குறிப்பாக அக்ரஹார பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த ஆற்றில் தான் நீராடிவிட்டு நாச்சியார் அம்மன் கோவிலுக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வார்கள் என கூறுகின்றனர். மேலும் நாச்சியார் அம்மன் கோவிலுக்கும் காசிவிசுவநாதர் கோவிலுக்கும் இந்த ஆற்றில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்வார்கள் என்றும் கூறினார்.
பாண்டியர் மன்னர் காலத்தில் ரிஷி ஒருவர் முக்தி அடைந்த பிறகு என்னுடைய அஸ்தியை காசியில் கரைத்து விடு என்றாம். அஸ்தியை எடுத்துக்கொண்டு இந்த காசிவிளங்கி ஆற்றை கடக்கும்போது அது புஷ்பமாக மாறியதால் இங்கேயே அவருடைய அஸ்தியை கரைத்து விட்டார்களாம், திடீரென்று மன்னருக்கு சந்தேகம் எழுந்தது நாம் காசியில் தான் கரைத்தோமா, இது காசி தானா? என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டதாம் மறுபடியும் அந்த பக்கம் வந்து கொண்டிருந்த போது இறைவன் தோன்றி நீ செய்தது சரியே இந்த ஆற்றில் நீராடினால் வாரணாசியில் உள்ள காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறியதாக தகவல் உண்டு என்றனர். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஆற்றின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பொதுமக்கள் கழிவுகளை ஆற்றில் கொட்டி சேதப்படுத்தினர். அதுமட்டுமின்றி அருகில் மீன் மார்க்கெட் இருப்பதால் இறைச்சிகளின் கழிவுகளை இந்த ஆற்றில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். போதாததற்கு அப்பகுதிவாசிகள் போகும் போதும் வரும் போதும், வாகனத்திலிருந்து தூக்கி எறியப்படும் குப்பை கழிவுகளால் சாக்கடையாக மாறிவிட்டது.
கடந்த 2005-ம் வருடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாலம் சேதம் அடைந்ததாகவும் அதன்பிறகு இந்த பாலத்தை பொதுப்பணித்துறை புதுப்பித்து தந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்வரை பயன்பாட்டில் இருந்த ஆறு 2005 க்கு பிறகு அதாவது புது பாலம் கட்டிய பிறகு தான் 4 படிக்கட்டுகள் பயன்பாட்டிற்கு இல்லாமல் போனதுதான், ஆற்றின் இந்த நிலமைக்கு காரணம் என்கின்றனர். மண் வளம் காப்போம் நீர் வளம் காப்போம் என்று வாயால் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது ஒரு மிகப்பெரிய புண்ணியநதி சாக்கடையாக மாறிக் கொண்டுவருவது வேதனையான அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திருச்சி மாநகராட்சியின் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும், கழிவுநீரை ஆற்றில் கலப்பவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆற்று நீரை பார்வையிட்டு 2005க்கு முன்பு இருந்தது போல் நான்கு படிக்கட்டுகளை சீரமைத்து கொடுத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. இந்த நிலைமையை குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மக்கள் எப்படி போனாலும், இயற்க்கை வளம் பாதித்தாலும் கவலை இல்லை என்ற அளவிற்கு அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த ஆற்றினால் அருகில் உள்ள 5000 மேற்பட்ட குடும்பத்தினர், காய்ச்சல், மஞ்சள்காமாலை, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி , மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் நலன் மீது மாநகராட்சி எந்த கவனமும் செலுத்தாமல், மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.