திருச்சி புதிய விமான நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் - பயணிகள் கோரிக்கை
திருச்சி புதிய சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாமல் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,112 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே பணிகள் முழுமை அடையாததால் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்தது. இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, விமானங்கள் இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் புதிய முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு நடைபெற்றது.
இதன்படி கடந்த ஜூன் 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய விமான முனையத்திற்கு பேருந்து வசதி இல்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு
புதிய விமான முனையம் சர்வதேச அளவில் மிக சிறப்பாக அமைக்கபட்டுள்ளது. பயணிகள் மத்தியில பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விமான நிலையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர 1.5 கி.மீட்டர் தொலைவு உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரிவர செய்யப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது மட்டுமின்றி திருச்சி விமான நிலையத்திற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பன்னாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வரும் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வருகின்றனர்.திருச்சி மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பணிகள் முழுமை அடையவில்லை - பயணிகள் குற்றச்சாட்டு
திருச்சி நாட்டு புதிய விமான நிலையம் திறந்தது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையத்தில் உள்ளே ஏங்கும் டிக்கெட் கவுண்டர் முழுமையாக செயல்படவில்லை, கழிவறை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை, வாகனம் நிறுத்தும் இடம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை, குடிநீர் பிரச்சனை, இருக்கைப் பிரச்சனை என அனைத்தும் விமான நிலையத்திற்கு உள்ளே இருக்கிறது.
இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள், குறிப்பாக பெண் பயணிகள் கழிவறை செல்வதற்கே அச்சம் ஏற்படும் சூழ்நிலையில் தான் கழிவறை உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு உடனடியாக விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.





















