புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக் இதுதான்... திருச்சி எம்.பி., துரை வைகோ கூறியது எதற்காக?
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள், இதனை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள்.
தஞ்சாவூர்: பொங்கல் தொகுப்புடன் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ கூறியது புத்தாண்டின் மிகப்பெரிய காமெடி (ஜோக்) என்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள், இதனை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசு பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பை மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.
மத்திய அரசிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நிதி கேட்டார்கள். ஆனால் மத்திய அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன்? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை, இந்த விவகாரத்தில் அமைச்சர் மகேஷ் உறுதியுடன் இருக்கிறார். சிறப்பாக செயல்படுகிறார். திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கல் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியது ஆங்கில புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக் ஆகும். இதனை பற்றி மேலும் பேச ஒன்றுமில்லை. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும்.
டில்லியில் சட்டம் ஒழுங்கு, பாஜக கையில் உள்ளது. ஆனால் தலைநகரில் எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வருகிறது. தலைநகரத்திலே மக்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. இந்த விவகாரத்தில் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொங்கல் பரிசுத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம். பொங்கல் பரிசு தொகுப்பாக அதிமுக ஆட்சியில் 2,500 ரூபாய் வரையில் வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார். அப்படி பார்த்தால் இன்றைய மதிப்பிற்கு ரூ.30,000 வருகிறது எனவே இந்த அரசு "பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.30,000 வழங்க வேண்டும். போன முறையே போராடி தான் ஒரு முழு கரும்பும், ரூ.1,000 பரிசு தொகை கிடைத்தது." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.