திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் ஆக மொத்தம் 6,98,728 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தது. கூடுதலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது. மேலும், பொங்கல் பண்டிகை 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படவுள்ளது.
அதனால், ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் வழக்கம்போல பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்படவுள்ளது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கத் தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கபட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் இல்லங்களுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது, (07.01.2024) முதல் (09.01.2024) வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் (10.01.2024) முதல் (14.01.2024) வரையில் எல்லா நாட்களிலும் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும். நடைமுறையிலுள்ள 6,97,837 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 891 குடும்பங்கள் ஆக மொத்தம் 6,98,728 குடும்பங்களுக்கு 1280 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள் / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, அலைபேசி எண். 9445045618-ல் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800---425---5901 ஆகிய எண்களிலும் மற்றும் ஆணையாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சென்னை அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் - 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.