பாலியல் புகார்; அனைத்து நிறுவனங்களுக்கும் திருச்சி ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மகளிர் விடுதிகளில் புகார் குழுவை கட்டாயம் அமைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியார் பிரதீப்குமார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியது..
திருச்சி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகள் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், ஜவுளிக் கடைகள் என அனைத்து பணித் தளங்களிலும், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் ஆகியவற்றில் பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்கும் வகையில் தொடர்புடைய நிறுனவங்கள் சார்பில் புகார் குழு அமைக்க வேண்டும்.
இந்த குழுவில் தலைமை அலுவலர், மூத்த நிலையிலான ஒரு பெண் அலுவலர், பணியாளர்களில் இரண்டு பேருக்கு குறையாத உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்பு அல்லது சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் இடம் பெறுவர். இக்குழு பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து உரியவாறு விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் குழு அமைக்காமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை
ஒவ்வொரு துறை, நிறுவனமும் குழுவினை உடனடியாக அமைத்து அதன் விவரத்தினையும், உறுப்பினர்கள் விவரம் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை திருச்சி மாவட்ட சமுக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இந்த குழுவில் 50 சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும், 3 ஆண்டுகளுக்கு குழுவின் பதவிக் காலம் உள்ளது. மேலும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக பணியிடங்களில் தனியாக புகார் பெட்டி வைக்க வேண்டும்.
இதுவரை குழு அமைக்காமல் இருந்தால் வரும் செப்.2-ஆம் தேதிக்குள் குழுவை அமைத்து அதன் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக் குழு அமைப்பது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கூடுதல் விவரம் பெற வேண்டுமெனில் மாவட்ட சமுகநலத் துறை அலுவலகத் தொலைபேசி 0431- 2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல் மற்றும் அது தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்தகைய குழு அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகார் குழு கட்டாயமாக அமைக்க வேண்டும். மேலும், குழு அமைக்காமல் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.