Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள புகாரின் பேரில் ஒரு நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் டி.எஸ்.பி. யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் நேற்று கோவையில் இருந்து 10 பேர் கொண்ட பெண் காவலர்கள் பாதுகாப்புடன் வாகனம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
பெண் காவலர்கள் என்னை தாக்கினர் – நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
கோவையில் இருந்து தன்னை திருச்சி அழைத்து வரும் வழியில் 5 பெண் காவலர்கள் என்னுடைய வலது கையை முறுக்கி கடுமையாக தாக்கினர். திருச்சி 3வது முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயபிரதாவிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார் தெரிவித்தார். நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறியது, ஏற்கனவே தன்னுடைய கை உடைக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், எனக்கான மருந்து, மாத்திரைகளை கூட வழங்காமல், தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாகவும், என்னை தாக்கும்போது அதனை புகைப்படம், வீடியோ எடுத்து காவலர்கள் இருக்கும் வாட்ஸ் குழுவில் பகிர்ந்துக்கொண்டதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும் தனக்கு கை, உடம்பெல்லாம் வலிப்பதாகவும் தனக்கு உடனடியாக சிகிச்சை வேண்டும் என்று சவுக்கு சங்கர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் நீதிபதி. இது குறித்து பெண் காவல் ஆய்வாளரை அழைத்து நீதிபதி கேட்டபோது, சவுக்கு சங்கர் பொய் சொல்வதாகவும், அப்படி யாரும் அவரை தாக்கவில்லை என்றும் கூறினார். அதோடு, உணவு உண்ண அழைத்தும் சவுக்கு சங்கர் வர மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார். ஏற்கனவே, கோவை சிறை கண்காணிப்பாளர் தன்னை தாக்கி கையை உடைத்துவிட்டதாக சவுக்கு சங்கர் சொல்லி வரும் நிலையில், இப்போது பெண் காவலர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சவுக்கு சங்கருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்த விதமான காயமும் இல்லை என தெரிவித்தனர். சவுக்கு சங்கர் மாலை 4 மணி அளவில் நீதிமன்றத்தல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் பெண் காவலர்கள் பரபரப்பு புகார்
நீதிமன்ற நடுவர் மீண்டும் வழக்கை விசாரிக்க தொடங்கினார். அப்போது குற்றவாளி சவுக்கு சங்கர் உடன் கோவையில் இருந்து வாகனம் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர்களை அழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது பெண் காவலர்கள் நாங்கள் அவர் மீது தாக்குதல் நடத்தவில்லை அவர் வேண்டுமென்றே பொய் கூறுகிறார்.
மாறாக அவர் திருமணமாகாத என்னிடம் எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கேட்டார். அது மட்டும் அல்லாமல் இனிமேல் நீங்கள் என்னை வீடியோ எடுத்தால் சமூக வலைதளங்களில் நான் உங்களைப் பற்றி வீடியோ வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், மேலும் பெண் காவலர்களை அசிங்கப்படுத்தும் விதமாக பதிவுகளை பதிவிடுவேன் என்றும் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இதனைத் தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிமன்ற நடுவர் நாளை ( இன்று) மதியம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். அதுவரை குற்றவாளி சவுக்கு சங்கர் திருச்சி மாவட்ட லால்குடி சிறையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

