Crime: திருச்சியில் ஷாக்! தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை - பெல் நிறுவனத்தில் நடந்தது என்ன?
திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது பெல் நிறுவனம். இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசு அதிகாரி:
இந்த நிறுவனத்தின் பிரிவு எஸ்.எஸ்.டி.பி. பிரிவு திருவெறும்பூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொதுமேலாளராக சண்முகம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல நேற்றும் அலுவலகத்திற்கு வந்தார். பணி முடிந்து வழக்கமாக இவர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். ஆனால், நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை:
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரது அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் பணியாளர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அவரது அறை உள்பக்கம் தாழிட்டு இருந்தது. இதையடுத்து, அவர்கள் அவரது அறையை அவர்கள் சோதித்தபோது உள்ளே அவர் சோபாவில் சாய்ந்து கிடந்தார். மேலும், அவரது கையில் துப்பாக்கி இருந்தது.
அந்த துப்பாக்கி தோட்டா அவரது தலையில் பாய்ந்து அவர் உயிர் பிரிந்திருந்தது. இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சண்முகத்தின் உடலை அருகில் உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பேரதிர்ச்சி:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரியவந்தது. போலீசார் தற்போது இவரது கையில் துப்பாக்கி எப்படி வந்தது? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறுவனத்தின் பொது மேலாளர் தனது அறையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரிய அதிர்ச்சியை பெல் நிறுவனம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





















