Trichy Airport: திருச்சி புதிய சர்வதேச விமானநிலையத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன.? - வாங்க பார்ப்போம்
Trichy Airport New Terminal: திருச்சியில் புதிய சர்வதேச விமான முனையத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க...
அதிநவீன வசதிகளுடன் புதிய முனையம் கட்டப்பட்டு உள்ளது. மேலும், புதிய முனையம் குறித்து விமான நிலைய பொறியாளரும், பொது மேலாளருமான செல்வகுமார் கூறியதாவது: தென் இந்தியாவில் தற்போது மொத்தம் 23 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசு விமான நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி மூலம் சிறிய விமான நிலையங்களை தரம் உயர்த்தவும், நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான சேவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக பொறியாளர்களை கொண்டு இந்த விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது திருச்சி விமான நிலையத்திற்குத்தான்.
மேலும், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய முனையம் ரூ.1200 கோடி செலவில் கடந்த 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இடையே கொரோனா தாக்கத்தால் பணிகள் முடங்கியது. இருப்பினும் அப்போதிருந்த தொழிலாளர்களை கொண்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த புதிய முனையம் மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 4 நுழைவாயில்கள், 12வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள்ளேயே பேருந்துகளில் அழைத்து வருவதற்காக 2 வழித்தடங்கள் உள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வௌிநாட்டு பயணிகள் 4,000 பேரையும் கையாள முடியும். 750 கார்கள் நிற்கும் வகையில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முனையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 345 ஏக்கரில் 305.03 ஏக்கர் பட்டா நிலமாகும். 40.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம். இதில் பட்டா நிலத்தில் 294.58 ஏக்கருக்கு உரிய தொகை வழங்கப்பட்டு விட்டது. ஏற்கனவே உள்ள முனையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், தோஹா, கொழும்பு, கோலாலம்பூர் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன், மலிண்டோ, ஏர் ஏசியா, ஸ்கூட் போன்ற விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன. இவைகளை தாண்டி புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தபின் புதிய விமான நிறுவனங்கள் சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக, இதுவரை இங்கு குறைவான அளவுள்ள பயணிகளை கொண்ட விமானங்கள் தான் இயக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் 200க்கும் அதிகமான பயணிகளுடன் அதிக நீளம், அகலமுள்ள விமானங்கள் திருச்சிக்கு வருகை தரும். இந்த புதிய முனையத்தில் ரூ.56 கோடி செலவில் நவீன விமான கட்டுப்பாட்டு அறை கட்டப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 9 அடுக்கு மாடிகளை கொண்ட 135 அடி உயரமுள்ள கட்டிடம் கட்டப்பட உள்ளது. 33 கி.வாட் மின் இணைப்பு கேட்டுள்ளோம். 1.6 மில்லியன் தண்ணீர் சேவைக்கு விண்ணப்பித்துள்ளோம். மொத்தம் 28 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 300மீ தூரம், 6மீ ஆழத்தில் திறந்தவௌி கீழ்தள பாலம் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விமான ஓடுதளத்தின் ஒரு பகுதி திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது கொஞ்சம் தாழ்வாக இறங்குவதால் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 300 மீ தூரத்திற்கு 6 மீ ஆழத்தில் திறந்தவௌி கீழ்தள பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. எனவே எல்லா நிலைகளிலும் விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த முயற்சி செய்து வருகிறோம்.
புதிய முனையமும் தகுந்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். திட்டமிட்ட நாட்களுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக பணிகள் முடிக்கபட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.