(Source: ECI/ABP News/ABP Majha)
Actor vijay: ‘எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே’ - திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
திருச்சியில் விஜய் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர் - எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே என்ற வாசகத்தோடு நடிகர் விஜய் படம்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நாளை தனது 49-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி கண்டோன்மெண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே என்ற வாசகத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் போற்றும் வரலாறே மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அடிக்கல் நாட்டாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் செய்து வருகிறார். மேலும் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை விஜய் ரசிகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் 10 வகுப்பு , 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு, பொன்னாடையும் அணிவித்தார். அதே மேடையில் மாணவர் மத்தியில் பேசும் போது ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், உங்களுடைய பெற்றோர்களும் வாங்க அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் வருங்கால தலைவர்களை தேர்வு செய்ய போறவர்கள் நீங்கள் தான், மேலும் வரும் தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் மேடையில் பேசிய மாணவி ஒருவர் எங்களுடைய ஓட்டுக்கள் மதிப்புள்ளதாக மாற வேண்டும் என்றால் நீங்கள் வர வேண்டும் என மாணவி பேசினார். அன்று நடைபெற்ற நிகழ்ச்சி அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .
தமிழகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி என்றாலே திருப்புமுனை என திராவிட கட்சிகள் கூறி வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கும் திருச்சி திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் திருச்சியை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். மேலும் விரைவில் திருச்சியில் மாநாடு நடைபெறும் என கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பாக விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் பிறந்தநாளை போற்றும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கேட்டபோது விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் திருச்சி மையமாகக் கொண்டு மாநாடு நடைபெறும் என தகவல் தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.