போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் வாகன ஓட்டுனர்கள்: மேம்பாலம் அமையுமா என எதிர்பார்ப்பு
திருச்சி-தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களின் கனவு நிறைவேறுமா?

தஞ்சாவூர்: தொழில் வளர்ச்சியில் கிடுகிடுவென்ற முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது திருச்சி. பஞ்சப்பூரில் பிரமாண்டமான பேருந்து முனையம், விரைவில் டைடல் பார்க் என்று திருச்சியில் கலரே மாறி வருகிறது. இந்நிலையில்தான் திருச்சி-தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களின் கனவு நிறைவேறுமா?
திருச்சி துவாக்குடி முதல் பால்பண்ணை வரை போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய மேம்பாலம் அல்லது சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாக நகருக்குள் செல்லும் 14.5 கி.மீ. தூரப் பகுதியில், வாகன நெரிசல் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. மோசமான சாலை நிலை, ஆக்கிரமிப்புகள் மற்றும் போதிய போக்குவரத்து மேலாண்மை இல்லாதது ஆகியவை போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இதனால், பொதுமக்கள், குறிப்பாக அலுவலகம் செல்லும் ஆண்கள், பெண்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலை, திருச்சி மற்றும் தஞ்சாவூரை இணைப்பது மட்டுமல்லாமல், புதுக்கோட்டைக்கும் முக்கியப் பாதையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நகருக்குள் நுழையும் முக்கிய வழித்தடம் என்பதால், கனரக வாகனங்கள், பேருந்துகள் எனப் பலவிதமான வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன. சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் நாள் முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகரித்தே காணப்படும். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர் போன்ற முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் நெரிசல் சொல்லி மாளாது. நத்தை வேகத்தில்தான் வாகனங்கள் நகர முடியும். இதனால், பயணிகளுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுகிறது.
பால் பண்ணை சந்திப்பில், வெளியூர்ப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதால், அங்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த சாலையில் மேடுபள்ளங்கள் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதுடன், விபத்துக்களின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. சில இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலையை உருவாக்குகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டுனர்கள் தரப்பில் கூறுகையில், மாலை நேரங்களில் வாகனங்கள் மிக மெதுவாகச் செல்கின்றன. இச்சாலையைக் கடக்க வழக்கமாக ஆகும் நேரத்தை விட இரு மடங்கு நேரம் ஆகிறது. சாலையின் நிலை சமீபகாலமாக மிகவும் மோசமடைந்துவிட்டது. அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது," என்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து காவல்துறை இந்தப் பிரச்சனையை விரிவாக ஆராய்ந்து, வாகனங்கள் தடையின்றிச் செல்லத் தேவையான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், பால் பண்ணையிலிருந்து துவாக்குடி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் அதிகாரிகள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மேலும், வெளியூர்ப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதைத் தவிர்த்து, அவற்றை மாற்றுப் பாதையில் திருப்பிவிட ஏதுவாக மேம்பாலம் அமைப்பது குறித்தும் ஆராய வேண்டும் என்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளதால், இது வாகனப் போக்குவரத்தை எளிதாக்கி, இந்த பரபரப்பான சாலையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த சர்வீஸ் சாலைகள், வாகனங்கள் விரைவாகச் செல்லவும், விபத்துக்களைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சாலையின் மோசமான நிலை, பயணிகளுக்கு மட்டுமல்லாமல்,சாலையோர வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் எளிதாக வந்து செல்ல முடியாததால், அவர்களின் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பிரச்சனையில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அதற்கு திருச்சி – தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.





















