ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டால் கொரோனா வார்டில் சிகிச்சை இல்லை - மா.சுப்பிரமணியன்
ஏழ்மையை குறிப்பிடும் விமான பயணிகளுக்கு ஒமைக்ரான் பரிசோதனை செலவை அரசே ஏற்கும் - திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து திருச்சி விமானநிலையத்தில், பன்னாட்டு விமானங்களில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான ஒமிக்ரான் பரிசோதனை நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, ஒமிக்ரான் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லாத வெளிநாடுகளிலிருந்து வரும் 2 சதவீத பயணிகளுக்கு அரசின் செலவில் முற்றிலும் இலவசமாக RTPCR பரிசோதனை செய்யப்படும். ஒமிக்ரான் தொற்றுக்கான அச்சுறுத்தல் உள்ள 12 நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் ரூபாய் 700 கட்டணத்தில் RTPCR பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தனது ஏழ்மையை குறிப்பிடும் பயணிகளுக்கு பரிசோதனைக்கான செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்களில் இப்பரிசோதனை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியை பொறுத்தவரை சிங்கப்பூரிலிருந்து காலை முதல் 2 விமானங்கள் மற்றும் இலங்கை வழியாக 1 விமானமும் வந்துள்ளன. ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் 663 பயணிகள் இதுவரை வருகை தந்துள்ளனர். இவர்களின் முகவரிகளை சுகாதார துறை ஆய்வாளர்கள், காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியோர் வசம் ஒப்படைக்கப்படும்.
இப்பயணிகள் ஒரு வார காலம் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகளின் படி வெளியே அனுமதிக்கபடுவார்கள். ஒமிக்ரான் நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரத்யேக வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தடுப்பூசி போடுவதில் பின் தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் அரசு எடுக்க நடவடிகைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.