மேலும் அறிய
Advertisement
கடைசிநாளில் நின்று போன திருமணம் - மணமகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மணமகள் தர்ணா
திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி மாநில இளம்பெண் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் மாதர் சங்கத்தினருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம், மணவெளி, கோட்டபொம்மன் நகரை சேர்ந்த துரை-இந்திரா என்ற தம்பதியினரின் மகள் சித்ரா (26) என்பதும், சிறுவயதில் இருக்கும் போது பெற்றோர் இறந்து விட்டதால் அவர் தற்போது புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை, ஒத்தவாடை தெருவில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் பிளஸ்-2 வரை படித்துள்ள சித்ரா, புதுச்சேரி புஸ்லி வீதியில் பால் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணத்திற்கு வரன் தேடி ஒரு திருமண இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். அந்த திருமண இணையதள முகவரி மூலம் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி பகுதிைய சேர்ந்த என்ஜினீயரான 27 வயது வாலிபர் சித்ராவிற்கு பழக்கமானார். மேலும் அந்த வாலிபர் செல்போனில் திருமணம் செய்வதாக சித்ராவிடம் கூறி, அடிக்கடி புதுச்சேரி சென்று அவரை சந்தித்து வந்துள்ளார். இதையடுத்து சித்ராவை திருமண அழைப்பிதழை அச்சடித்து, திருமண ஏற்பாட்டை செய்து விட்டு உடனே அடைக்கம்பட்டிக்கு வருமாறு அந்த வாலிபர் கூறியுள்ளார்.
இதனை நம்பி சித்ராவும் திருமணத்தை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி வைத்து கொள்ளலாம் என்று அழைப்பிதழும் அச்சடித்து, அழைப்பிதழுடன் கடந்த 12ஆம் தேதி மாலை அந்த வாலிபர் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து மறுநாள் காலை அந்த வாலிபர் குடும்பத்தினர், உறவினர்கள் சித்ராவிடம் சண்டையிட்டு பின்னர் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி சித்ராவை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி சித்ரா பெரம்பலூருக்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். அப்போது செல்போன் மூலம் அந்த வாலிபரின் குடும்பத்தினர், உறவினர்கள் சித்ராவை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல் நிலையம் வந்து சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் சித்ரா அந்த வாலிபருக்கு போன் செய்து எப்போது வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் நான் வரமாட்டேன். திருமணம் செய்து கொள்ளவும் மாட்டேன் என்று செல்போனை சுவிட்சு ஆப் செய்து வைத்து விட்டார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அந்த வாலிபர் மீதும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சித்ரா தர்ணாவில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சித்ரா தர்ணாவை கைவிட்டு சென்றார். இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion