Thaipusam Festival 2024 : விராலிமலை முருகன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தைப்பூச தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்பது வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். அதாவது தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர். மேலும் வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர். இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன. நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர். இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் இக்கோவிலின் முக்கிய சிறப்பாகும்.
குறிப்பாக எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம்.
பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது