தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா - திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஆலை விரிவாக்கப் பணி, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு II-ன் முதல் கட்ட ஆலை விரிவாக்க திட்டத்தின் கீழ், 1,385 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு, இரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகா வாட் திறன் கொண்ட மின் ஆக்கி பிரிவு ஆகியவற்றை திறந்து வைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் வன்மரக்கூழ் ஆலை மற்றும் இரசாயன மீட்புப் பிரிவு மிகவும் நவீனமானதாகும். ஆலையின் இந்த விரிவாக்கத் திட்டப் பணிகள் கொரோனா காலக் கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கி மிகக்குறுகிய காலத்தில் சிறந்த தரத்திலான காகிதக்கூழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு இரண்டு கூழ் மற்றும் காகித அட்டை தயாரிக்கும் ஒரு ஒருங்கிணைந்த ஆலையாக மாறியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட இருபுறமும் மேற்பூச்சு செய்யப்படும் அடுக்கு காகித அட்டை ஆலை திருச்சிராப்பள்ளி மாவட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த கட்ட வளர்ச்சியாக, இந்நிறுவனத்தின் இரண்டாம் அலகில், ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஆலை விரிவாக்க திட்டத்தை 2520 கோடி ரூபாய் மூலதனத்தில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஆலை விரிவாக்கத்தின் முதல் கட்டப் பணி 1,385 கோடி ரூபாய் செலவில் தற்போது நிறைவடைந்த நிலையில், நிதி ஆதாரங்களைப் பெற்ற பின், இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டமாக, புதிய காகித அட்டை தயாரிக்கும் இயந்திரம், காகிதம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மின் ஆக்கியை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்நிறுவனம் காகித மரக்கூழ் உற்பத்தியை தொடங்குவதன் மூலம், காகித அட்டைக்கு தேவையான வன்மரக்கூழ் இறக்குமதி, கொள்முதல் முற்றிலும் தவிர்க்கப்படும். நல்ல தரமுள்ள காகித அட்டைகளை உற்பத்தி செய்யும் பொருட்டு, இந்த இயந்திரங்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளதாகவும், கணினியின் மூலம் துல்லியமாக இயக்கப்படும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், உற்பத்தி தரத்தையும், திறனையும் கூட்டி, செலவினத்தை குறைத்து, ஆலையின் வளர்ச்சியை மேம்படுத்த இயலும். இந்த பிரிவுகளை நிறுவுவதன் மூலம் இவ்வாலையின் ஒட்டுமொத்த செயல்திறனும், உற்பத்தியும் அதிகரிக்கும். இத்திட்டம் அடுக்கு காகித அட்டை ஆலையின் காகித மரக்கூழ் தேவையினை நிறைவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.
மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா
திருச்சி மாவட்டத்தின், முதல் சிப்காட் தொழிற்பூங்கா மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி, கே பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமங்களில் 1097.36 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ளது. இதில் முதல் கட்ட நிலையான 466.10 ஏக்கர் பரப்பளவில், 137.94 ஏக்கரில் உணவு பூங்காவும், 93.50 ஏக்கரில் பொது பொறியியல் பூங்காவும், 47.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இத்தொழிற்பூங்காவிற்கான நிர்வாக கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, மழைநீர் வடிகால், தெரு விளக்கு, நீர் விநியோகம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்பூங்கா முழு நில ஒதுக்கீடு நிலையை அடையும் பொழுது, 3,750 கோடி ரூபாய் அளவில் முதலீட்டை ஈர்ப்பதுடன் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்தொழிற்பூங்காவில் அமையவுள்ள உணவு பூங்காவில் முரல்யா டெய்ரி புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு நில ஒதுக்கீட்டு ஆணையையும், பொது பொறியியல் பூங்காவில் என்டெலஸ் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், நியுடெக் என்ஜீனியரிங் மற்றும் சரவணா பாஸ்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி என். சிவா, சு. திருநாவுக்கரசர், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சீ. கதிரவன், சௌந்தரபாண்டியன், ந. தியாகராஜன், செ. ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, அப்துல் சமது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். மு. சாய் குமார், சிப்காட் மேலாண்மை இயக்குநர் எ. சுந்தரவல்லி, செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.