திருச்சியில் அதிர்ச்சி .. காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக் கொலை - 5 பேர் அதிரடியாக கைது
திருச்சி மாநகர், ஸ்ரீரங்கம் பகுதியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
திருச்சி மாநகரில் முழுமையாக குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும் என வாராந்திர சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் புகார் மனுக்களை உடனடியாக விசாரணை செய்து தீர்வு காண வேண்டுமென காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாநகரைப் பொருத்தவரை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்..
குறிப்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த புகார் வந்தாலும் உடனடியாக கணிப்பொறியில் பதிவு செய்து அவர்களது குறைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களிடம், 100-க்கு அழைப்பு வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று புகார்தாரர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோந்து செல்வதில் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்வது அவசியமானது. அப்படி ரோந்து செல்வதால் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
திருச்சியில் கல்லூரி மாணவர் அடித்து கொலை - 5 பேர் கைது..
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் ( வயது 17 ). இவர் திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. வேதியியல் பாடம் பயின்று வந்தார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் கணபதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ரஞ்சித் கண்ணன் சென்றுள்ளார். அந்த வீட்டின் அருகே உள்ள கீதாபுரம் பகுதியில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்.
அப்போது, அந்தப் பகுதியில் மது அருந்து கொண்டிருந்த சிலர், 'வெளியூர் காரணுக்கு இங்கு என்ன வேலை?' என கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த ரஞ்சித் கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த சிலர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் கண்ணன் உயிரிழந்தார்.
இது குறித்து அம்மா மண்டபம் ரோடு புதுத் தெருவைச் சேர்ந்த நவீன் குமார் (வயது 23) விஜய் (வயது 23), சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் (வயது 25), கீதாபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.