மீண்டும் எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கியது ஏன்? - சீமான் கேள்வி
TNPSC தலைவராக தமிழர் சைலேந்திரபாபு ஏன் நியமனம் செய்யவில்லை. பிரபாகர் எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள். குறிப்பாக சைலேந்திரபாபு விட என்ன தகுதி உள்ளது பிரபாகருக்கு...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது...
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் வலிமையான கட்சியாக மாற வேண்டும். வலிமையான படையை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு கருத்துக்களை ஆலோசனை செய்து வருகிறேன்.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை யாரையும், வேண்டும் என்று நீக்கவில்லை. புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் நீக்கப்படுகிறார்கள் கட்சி வேண்டுமென்றால் அதற்கான விளக்கத்தை அவர்கள் கேட்கலாம், வேண்டாம் என்றால் விலகி செல்லலாம் அது அவர்களுடைய விருப்பம்.
பழனியில் முருகன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி என்பது ஏற்புடையது அல்ல. ஏனென்றால் தமிழரின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து கூறிக் கொண்டுள்ளது. ஆனால் குடமுழுக்கில் தமிழில் இல்லை, அர்ச்சனை தமிழில் இல்லை. ஏன் அங்கு சமஸ்கிருதம் வரவேண்டும்.
எதிலும் தமிழ், எங்கேயும் தமிழ் என்று கூறுபவர்கள் தற்போது எங்கே போனார்கள். இந்த மாநாடு என்பது மக்களை ஏமாற்றி ஓட்டு அரசியலை செய்துள்ளார்கள்.
தமிழை வளர்க்கிறோம் என்று தொடர்ந்து கூறி வருபவர்கள், ஏன் திருக்குறளை முழுமையாக மக்களிடையே கொண்டு சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற திட்டத்தை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம்.
சமூக நீதி பேசுபவர்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்களில் அர்ச்சனையை தமிழில் செய்ய வேண்டும்.
தமிழுக்காக போராட்டம், தமிழை வளர்க்க போராட்டம் என்று கூறுபவர்கள், தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு ஒரு நிர்பந்தத்தின் காரணமாக நடைபெற்றுள்ளது.
திருச்சி எஸ்பி. வருண்குமார் IPS பதவியை ராஜினாமா செய்து விட்டு, DMK IT Wing சேரலாம்..
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடர்ந்து, தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், IPS பதவிக்கு மரியாதை கொடுக்காமல், திருட்டு ரயில் ஏறி வந்தவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். கொழுப்பு அதிகமாக உள்ளது. யாருடைய பணத்தில் மாதச் சம்பளம் வாங்கினார், அவர் வாங்கும் மாதச் சம்பளத்தில் என்னுடைய பணமும் உள்ளது.
IPS பதவிக்கு உரிய பணியை மேற்கொள்ள வேண்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு திமுக ஐடி விங்கில் சென்று பணியாற்றலாம்.
தமிழ்நாடு முழுவதும் யார் தவறு செய்தாலும் உடனடியாக அவர்கள் நாம் தமிழர் கட்சி சேர்ந்தவர்கள் என்று சொல்வது அநாகரீகம். மேலும் தமிழ்நாட்டில் எந்த மூலையில் யார் தவறு செய்தாலும் உடனடியாக அவர்களை திருச்சிக்கு வரவழைத்து தண்டனை வழங்குவது என்ன நியாயம், இவர் தனியாக ராஜ்ஜியம் நடத்துகிறார்.
என்னை பிச்சை எடுப்பவர் என்று கூறுகிறார், என் கட்சி வளர்ப்பதற்காக நான் பொதுமக்களிடம், கையேந்தி கேட்கிறேன் அதில் இவருக்கு என்ன பிரச்சனை.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
நான் எஸ்.பி. வருண்குமார் இல்லத்திற்கு சென்று அவர் தந்தையிடமோ இல்லை மற்றவரிடமோ கையேந்தி நின்றேனா? இவர் எப்படி என்னை பிச்சைக்காரன் என்று கூறலாம். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை, உங்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறோம்.
TNPSC தலைவராக தமிழர் சைலேந்திரபாபு ஏன் நியமனம் செய்யவில்லை. பிரபாகர் எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள். குறிப்பாக சைலேந்திரபாபு விட என்ன தகுதி உள்ளது பிரபாகருக்கு.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக பணியாற்றியவர் தான் இந்த பிரபாகர். இதிலிருந்தே தெரிகிறது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று. உள் இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு இணை அமைச்சர் பதவி வழங்காமல் மீண்டும் எல்.முருகனுக்கு பதவி வழங்கியது ஏன்?.
மூத்த நிர்வாகியான நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கிருக்க வேண்டும் என்றார்.