திருச்சி: “மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு” - இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம்
சோலகம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இறந்த மூதாட்டியின் உடலுடன் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவை சேர்ந்த முரட்டு சோலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மூக்காயி (வயது 95). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில் இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பாதையை திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மூக்காயியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மூதாட்டியின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முரட்டு சோலகம்பட்டியில் இருந்து கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு மூதாட்டியின் உடல் அருகே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலை 7 மணிக்கு தொடங்கிய முற்றுகை போராட்டம் காலை 10 மணி வரை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மூக்காயியின் மகன் செல்வராஜ் கூறியதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை இறந்தபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய முறையில் அளவீடு செய்து மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை மீட்டு கொடுத்தனர்.
மேலும் ஆனால் எனது தந்தை இறந்த அடுத்த நாளே மீண்டும் அந்த இடத்தை அதே நபர் ஆக்கிரமித்து விட்டார். இதுகுறித்து கடந்த 6 மாதங்களாக கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை நேரில் வந்து புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து ஆர்.டி.ஓ.விடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்சினையில் தலையிட்டு மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டு தருவதுடன், இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கந்தர்வகோட்டை தாசில்தார் மற்றும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மயான பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலம் மீட்டு தரப்படும் என்றும், மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய வருவாய்த்துறையினரும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து மூதாட்டியின் உடலை சொர்க்க ரதம் மூலம் மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். மயானத்திற்கு பாதை கேட்டு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மூதாட்டியின் உடலுடன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது